காஞ்சிக் கடிதம்: 20
கங்கா தீர்த்தம்-1
பொருளற்ற சொல் பயனற்றுப் போகும்
சோஷியலிசம் என்பதுதான் என்ன?
காமராசர் பேசுவது சோஷியலிசம்; குலவுவதோ முதலாளிகளிடம்!
தம்பி,
நெல்லுக்கும் பதருக்கும் உருவ அமைப்பிலே அதிக வித்தியாசம் தெரிவதில்லை; ஆனால், உழவர்கள் எளிதாக இரண்டையும் வெவ்வேறாகப் பிரித்துவிடுகிறார்கள்; ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துப் பார்த்து அல்ல; முறத்திலே கொட்டி, காற்றடிக்கும் பக்கமாக நின்று ‘தூற்றி’ எடுப்பதன் மூலம்.
கானலுக்கும் நீருக்கும் தொலைவிலிருந்து பார்க்கும் போது வேறுபாடு தெரிவதில்லை; கானல், நீர்போலவே தோற்றமளிக்கிறது; அருகே சென்று பார்த்தால் கானல் என்று கண்டறிந்திட முடிகிறது.
சொல்லிலே கூடப் பதரும் உண்டு, நெல்லும் உண்டு; கானலும் உண்டு, நீரும் உண்டு; கண்டறிய வேண்டும். அதற்குக் காது மட்டும் பயன்பட்டால் போதாது, கருத்து சுறுசுறுப்பாக வேலை செய்தபடி இருக்கவேண்டும்.
நெல் விளைவிக்க எடுத்துக்கொள்ள வேண்டி வரும் முயற்சி உழைப்புப்போலவா சொல்லை விளைவித்திடத்