பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

தேவைப்படுகிறது? வெகு எளிதாக வண்டி வண்டியாக, அம்பாரம் அம்பாரமாகக் குவித்திட முடிகிறது, சொல்லினை.

நெல்லுக்கும் பதருக்கும் உள்ள வேறுபாட்டினைக் கண்டறிந்து, பதரை அப்புறப்படுத்தினால் மட்டுமே, பயனுள்ள நெல்லைப் பெறமுடியும்; சொல்லுக்கும் அவ்விதமே.

பயனற்றதைச் சொல்லாதே என்கிறார் வள்ளுவர்; கேட்டனரா! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார், கேட்டனரா? இல்லையே.

பயனற்றன பேசுவதிலேயும், தம்பி! இருவகை உண்டு. ஒன்று தெரியாமல் பயனற்றன பேசிவிடுவது; மற்றொன்று, தெரிந்து, திட்டமிட்டு, வேண்டுமென்றே, கேட்பவர்களை ஏய்க்க என்றே பயனற்றவைகளை, பயனுள்ளவைபோலத் தோற்றம் கொள்ளும்படிச் செய்து பேசி வைப்பது. முன்னது அறியாமையின் விளைவு, மற்றது கயமையின் ஒருவகை.

மற்றொன்றும் தெரிந்திருக்குமே தம்பி! சீமான் கொடுக்கும் வேப்பெண்ணெய் தேன்போல் இனிக்கிறது என்று கூற வேண்டிய கொடுமையை ஏழைகள் சில வேளைகளிலே தாங்கித் தொலைக்க வேண்டி நேரிட்டுவிடுகிறது. சீமான் என்று நான் குறிப்பிடுவது பணம் படைத்தவனை மட்டுமல்ல, பதவியால் உயர்ந்திருப்பவரும் ஒரு வகையில் சீமானே! அதிலும் இந்நாட்களில் பணம் படைத்தவன் கூடப் பதவி பிடித்தவன் முன்பு கைகட்டி நிற்கவேண்டி இருக்கிறது, காரியம் சாதித்துக்கொள்ள.

பெரிய புள்ளியின் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசுவது கூடாது என்ற எண்ணத்தில், குமுட்டல் கொடுத்திடுவதைக்கூட இனிப்பளிப்பதாக, ஏழை கூறிட வேண்டி நேரிட்டுவிடுகிறது; ஆனால் அந்த ஏழைக்கு உண்மை தெரியும்: நாக்கு மட்டுந்தான் வேறுவிதமாகப் பேசுகிறது; நெஞ்சம் உண்மையினை அறியும். நிலை காரணமாக, அந்தப் பேச்சு.

அஃதே போலத்தான் பதவியில் உயர்ந்தவர்கள், பதர் கொடுத்து இது உயர்தரமான நெல் என்று கூறிடும் போது, ஏழையால் மறுத்துப் பேசிட முடிவதில்லை.