பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

நங்கை அவள் நொண்டி. நகர்கின்றாள், நைந்த கண்ணாள் முகமது சுண்டி.

என்று பாடினார்.

அநியாயம் இழைக்கப்படும்போது, தேவனைத்தொழுது பரிகாரம் தேடுகின்றனரல்லவா—அது எப்படிப் பயனற்றுப் போகிறது என்பதனைக் காட்டுகிறார் கிரேக்கக் கவிஞர்

அநியாயம் மானாகப் பறக்கிறதாம்!
அநியாயத்தை வீழ்த்தக் கிளம்பும் தொழுகை எனும் பெண்ணுக்கு, கண் குருடாம், கால் நொண்டியாம்!

இப்போது, அநியாயத்தை வீழ்த்தக் கிளம்பும் சட்டம், இதைவிட மோசமான நிலையில் அல்லவா இருக்கிறது!

சரி, அண்ணா! கலப்படத்தால் விளையும் கேடு பற்றி எதற்காக இப்போது கூறுகிறாய்? எந்தப் பண்டம் வாங்கி ஏமாந்துவிட்டாய்? என்று கேட்கிறாயா, தம்பி! நான் கூறவந்தது, சொல்லிலே கலக்கப்பட்டு விடும் பயனற்றன பற்றி; இடையிலே பொருளிலே கலக்கப்பட்டுவிடும் பயனற்றவை பற்றியும் குறிப்பிட்டேன்.

தம்பி! வடிவத்திலே ஒத்தது போலவே இருப்பினும் ஏன் பதர், கானல் இவைகளைப் பயனற்றன என்கிறோம்.

பொருளற்றன, பயனற்றன; அவ்வளவே!

பதருக்குள்ளே, பொருள் இல்லை, நெல்லுக்குள் அரிசி எனும் பொருள் இருப்பது போல! பொருள் இல்லை; ஆகவே பயன் இல்லை!!

கானலில், நீர் இல்லை, பருகிட! பொருள் இல்லை, பயன் இல்லை!

சொல்லிலேயும் அவ்விதமே, பயனுள்ள சொல்லில் பொருளிருக்கும், பொருளுள்ள சொல்லால் பயன் கிடைக்கும்; பொருளற்ற சொல் பயனற்றுப் போகும்.

நெல்லும் பதரும் ஒரே பயிரிலே விளைவது போலவே, பயனுள்ள சொல்லும் பயனற்ற சொல்லும், ஒரே பேச்சிலிருந்துதான் முளைக்கின்றன.