பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

179

பதர் நீக்கி நெல் கொள்வதுபோல, பேசப்படுவனவற்றில் பயனற்றதை நீக்கிவிட்டுப் பயனுள்ளதைக் கொள்ளவேண்டும்.

இது மிகக் கடினமா! என்ன அண்ணா! உனக்கு இளையவன்—வயதில்தானே!! பதர் நீக்கி நெல்லைக் கொள்ளவேண்டும் என்பதனைக் கூடவா எனக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்று கேட்பாயோ, தம்பி! கேட்டாலும் கேட்டுவிடுவாய்; ஆகவே விரைந்து கூறிவிடுகிறேன். நான் குறிப்பிட்டேனே, சீமான் கொடுத்த வேப்பெண்ணெய்—அதனை நினைவுபடுத்திக் கொள். பயனற்றன—பயனளிப்பன என்று சொல்லைப் பிரித்து விடலாம், நல்லன கொண்டு அல்லன தள்ளலாம்—நம்மை ஒத்தவர்கள் பேசக் கேட்டால்; ஆனால், பேசுபவர், பெரிய புள்ளி—பெரிய பதவியில் உள்ளவர் என்றால் முடியுமா; எளிதாக! முடியும் என்னால்! என்கிறாயா!! சரி தம்பி! நீ எதனையும் துருவித் துருவிப் பார்த்திடவும், உண்மையை எடுத்துரைக்கவும் தேவைப்படும் இயல்பினைக் கொண்டிருக்கிறாய்; உன்னால் முடிகிறது. ஆனால், எல்லோராலும் முடியுமா—எத்தனையோ தொல்லைகளைத் தாங்கித் தாங்கி வாழ்க்கையே வளைந்து போயுள்ள நிலையில் உள்ளவர்களால் முடியுமா—பதவியில் உயர்ந்தவர்கள் பேசும் பேச்சிலே, தரம், வகை பிரித்துக் காட்டி, அவர்களின் கோபம் கிளம்பித் தாக்கினால் அதனுடைய வேகத்தைத் தாங்கிக் கொள்ளும் ‘உள்ள உரம்’ எல்லோருக்குமா ஏற்பட்டுவிடும்? முடியாதல்லவா! அவர்கள் நெல்லுக்குப் பதிலாகப் பதர் கிடைக்கப்பெற்று, பதர் என்று வெளியே கூறிடவும் முடியாமல், அதனைச் சுமந்தும் செல்லவேண்டி நேரிட்டு விடுகிறது. காமராஜரின் சுற்றுப் பயணப் பேச்சைக் கேட்டவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள்; இதழ்களிலே நான் பார்த்த அளவில், எனக்கும் அதுபோலத்தான் தோன்றுகிறது.

தம்பி! மற்றொன்று உளது முக்கியமானது; பேச்சு பொருளுள்ளதாக, பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்பதுடன், சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தமிருக்கவேண்டும்; சொல் சுவைத்து, செயல் கசப்பளித்தால், பயன் என்ன?