பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

வாளது கையில்கொண்டு
வருபவன் சிரம் அறுத்து
வாகையைச் சூடிநானே
வந்திடுவேன்,உறுதி உறுதியாமே!

என்று உரத்த குரலிலே முழக்கம் எழுப்பிவிட்டு, களம் நோக்கிச் செல்லாமல், அடுக்களை சென்று பதுங்கினால், முழக்கத்தால் பயன் என்ன கிடைத்திடும்!

செந்தமிழின் சுவையினைச் சேர்த்து, செல்லரித்துப் போன ஏடுகளிலே உள்ள கதைகளுக்குப் புதுவடிவம் கொடுத்து, காலட்சேபம் செய்து கனதனவான் வாழ்க்கையைப் பெற்றிருப்பவர்கள் சிலரை அறிந்திருப்பாயே, தம்பி! அப்படிப்பட்டவரில் ஒருவர்-பெயரா? ஏதாவது வைத்துக்கொள்ளேன்! — தேனாமிர்தானந்தர்! —பரதன் பாதுகை சுமந்ததுபற்றி உருக்கமாகக் காலட்சேபம் செய்துவிட்டு, அன்றிரவு அண்ணனுக்குச் சேரவேண்டிய சொத்தினை ஏமாற்றிப் பறித்துக் கொள்வதற்காக, ஆள்வைத்து அவனை மண்டையில் அடித்து, மூளை குழம்பிப்போகும்படி செய்து, ‘பித்தர் விடுதி’யில் சேர்த்தவிட்ட பிள்ளைப் பெருமாள் எனும் சீமான் வீட்டில் விருந்துண்ணச்செல்வதும், கண்ணப்ப நாயனார் கதையை, கேட்பவர் கண்களில் நீர் வழியும் விதமாகக் ‘காலட்சேபம்’ செய்துவிட்டு, இளையாளுக்காக மூத்தாளைத் தாக்கி, அதன் காரணமாக அவளுடைய கண்ணுக்குச் சேதம் உண்டாக்கி, அது மாரியம்மன் செய்தது என்று மற்றவர்களை நம்பும்படி செய்துவிட்ட பெரியசாமி மாளிகையில் விருந்துண்ணச் செல்வதும், வள்ளலார் வகுத்த வழிபற்றி அழகொழுகப் பேசிவிட்டு, பட்டாளத்துக்கு ஆட்டுக்கறி ‘காண்ட்ராக்ட்’ எடுத்து ஆறு இலட்சம் ஆதாயம் பெற்ற அருமை நாயகம் பங்களாவில் விருந்து சாப்பிடச் செல்வதும், காரைக்காலம்மையார் பற்றிக் காலட்சேபம் செய்துவிட்டு, கணவனிடம் மல்லுக்கு நின்று மாதம் ஆயிரம் ஜீவனாம்சம் பெற்றுக்கொண்ட மரகதம் வீட்டிலே சிற்றுண்டி சாப்பிடச் செல்வதும், எம்மதமும் சம்மதம் என்ற சமரசபோதம் அளித்துவிட்டு, கோயில் யானைக்கு நாமம், வடகலையா, தென்கலையா என்ற பிரச்சினையில் முன்னாலே நின்று, எதிர்த்தரப்பினரை ஆள்வைத்து மண்டையை உடைத்த தர்மகர்த்தா தனபாலர் வீட்டிலே