181
விருந்துக்குச் செல்வதும், ஆலயத் திருப்பணி பற்றி அழகாகப் பேசிவிட்டு, அம்பாளின் ஆபரணங்களைத் தன்னுடைய ‘அன்னத்துக்கு’ என்று ஆக்கிக்கொண்ட கோயிற் பெருச்சாளி கோதண்டபாணி வீட்டிலே ‘ஜாகை’ வைத்துக்கொள்வதும், பொருத்தம் என்று புராணத்தைப் போற்றுபவர்களேகூட ஒப்புக்கொள்பவர்களா! சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தமில்லையே; எதெது தவறு, பாபம் என்று காலட்சேபத்தில் கூறுகிறாரோ, அந்தத் தவறுகளை, பாபங்களைச் செய்து பணம் திரட்டிக்கொண்டுள்ள பாதகர்களின் விருந்தினராகச் செல்லலாமா? எப்படி மனம் ஒப்பிச் செல்கிறார்? இவர் அப்படிப்பட்டவர்களின் இல்லங்களில் சென்று விருந்துண்டால், ஊரார் என்ன எண்ணிக்கொள்வார்கள்? எத்தனையோ பயல்கள், என்னை அக்கிரமக்காரன், அநியாயம் செய்தவன் என்று பேசினார்கள்! இப்போது என்ன சொல்கிறார்கள். அறநெறிபற்றியும் அன்புவழிபற்றியும், அரி அரன் அவர் மகன் ஆகியோரின் மகிமைபற்றியும் அழகாகக் காலட்சேபம் நடாத்தும் தேனாமிர்தானந்தரே எனது இல்லத்திற்கு வந்திருந்தார், விருந்துண்டார், வாழ்த்தினார்; காணிக்கையை ஏற்றுக்கொண்டார்! என்று அவர்கள் பேசமாட்டார்களா! உள்ளபடி அந்தக் காலட்சேபம் செய்பவருக்கு, அக்கிரமத்திலே வெறுப்பு என்றால், அக்கிரமக்காரர் வீடுசெல்ல மனம் இடம் கொடுக்குமா! சென்றார் என்றால், அவரைப்பற்றி என்ன தம்பி! எண்ணிக்கொள்வாய்? அவருடைய ‘காலட்சேபம்’ பற்றி எந்த விதமான மதிப்புப்போடுவாய்?
சூறாவளிச் சுற்றுப் பயணக்காரர்—காமராஜர்—3000 மைல்களாமே—அவ்வளவு தொலைவுசுற்றி, பேசினாரே, ஏழைக்காக, சோஷியலிசத்துக்காக—தம்பி! அந்தப் பேச்சிலே பதர் எவ்வளவு என்பது ஒருபுறம் இருக்க, அந்தப் பேச்சுப் பேசினவரை வாழ்த்தி வரவேற்றவர்கள், செலவு செய்து விழா எடுத்தவர்கள், சூழ நின்று சூடம் கொளுத்தியவர்கள், மாளிகை அழைத்துச் சென்று விருந்து நடத்தியவர்கள், இவர்கள் யார்? சோஷியலிசத்துக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏழை இவர்களைப்பற்றி என்ன எண்ணுகிறான்? என்பவைபற்றி எண்ணிப்பார்த்தால் தம்பி! நான் குறிப்பிட்ட காலட்சேபக்காரர் உவமையின் பொருள் விளங்கும்.