பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

ஒரு ஊரில் பஸ் முதலாளி, மற்றோர் இடத்தில் ஆலை அரசர், இன்னோரிடத்தில் வட்டிக் கடைக்காரர், வேறோரிடத்தில் மிட்டா, மற்றுமோரிடத்தில் புது பர்மிட், இப்படிப்பட்டவர்கள் இல்லங்களிலா, அல்லது ஆலைத் தொழிலாளி, கதர்க் கடையில் கணக்கெழுதுபவர் போன்ற எளியோர் குடில்களிலா, எங்கு அழைத்துச் செல்லப்பட்டார், சோஷியலிசம் பேசியவர் என்பதைக் கேட்டறிந்தால், தம்பி! சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தம் இல்லாததை, முரண்பாடே இருப்பதை அறிந்துகொள்ளலாம்; அறிந்து கொண்டுள்ளனர் மக்கள்.

“ஏழைபங்காளர் காமராஜர் என்பது இப்போது தெரிகிறதல்லவா?”

மண்டலம் கேட்கிறார் இதுபோல வறண்ட தலைத்தோழரைப் பார்த்து.

“மகராஜன்! ஏழைக்காகத்தான் ஆட்சி என்கிறார். காது குளிரக் கேட்டேன்” என்று அந்த ஏழை கூறுகிறான்; உடனே மண்டலம், சரி! இந்த ஓட்டு நமக்கு, காங்கிரசுக்கு என்று எண்ணிப் பூரித்து, வேறு ஆளைப் பார்க்கச் செல்கிறார். ஏழைக்காகப் பேசிய காமராஜர் ஏறிச் செல்லும் படகு மோட்டார் பறந்து வருகிறது; பாதையில் நிற்காதே, போ! அந்தப் பக்கம்! என்று விரட்டுகிறார் போலீஸ்காரர்.
“எங்கே செல்கிறார் காமராஜர்?”

என்று கேட்கிறான் ஏழை, போலீஸ்காரரிடம்.

கட்டாயம் தெரிந்து கொண்டாக வேண்டுமோ! ஏனாம்! பேட்டி பார்க்கவோ!

என்று கேலி பேசித் துரத்துகிறார். காலை முதல் கால்கடுக்கச் சேவகம் பார்த்த அலுப்பினால், கான்ஸ்டபிள்.

மற்றோர் ஏழை பதில் கூறுகிறான்.
ஆலை முதலாளி அய்யம்பெருமாள் அரண்மனைக்கு.

இது கேட்ட ஏழையின் உச்சி குளிருமா! உள்ளம் பதறுகிறது.