பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

183

அய்யம்பெருமாள் அரண்மனைக்கா!
விருந்து சாப்பிட அந்த இடமா!
நூல் கட்டுகளைக் கள்ளமார்க்கட்டில் விற்பவனாயிற்றே.
நெசவாளர்களின் குடும்பம் எத்தனையோ நாசமாகக் காரணமாக இருந்தவனாயிற்றே.
கணக்கு, மூன்று நாலு தினுசாச்சே அவனிடம், அவன் அரண்மனைக்கா செல்கிறார் காமராஜர்.
அவன் போன்றவர்களின் ஆதீக்கத்தை ஒழித்தால்தானே, சோஷியலிசம் மலரும்.
சோஷியலிசம் மலர்ந்தால்தானே ஏழைக்கு வாழ்வு.
ஏழையின் வாழ்வைக் குலைக்கும் எத்தன் அரண்மனைக்கு இவர் போகலாமா?
இவர் அங்குப் போனால் பிறகு சோஷியலிசம் பெற எப்படி வேலை செய்ய முடியும்?
பேசுவது சோஷியலிசம், குலவுவது முதலாளியிடமா!
எங்கள் காதுக்காகச் சோஷியலிசப் பேச்சு; இவர் தங்குமிடம் முதலாளி மாளிகை!

இவ்விதமெல்லாம் தம்பி! அந்த ஏழை கேட்க முடியாது-மனத்திலே இவை கொந்தளித்தபடி இருக்கும். மண்டலத்துக்கு இது தெரியாது!

சோஷியலிசம் ஏன் தேவைப்படுகிறது? என்பது குறித்தும், சோஷியலிசம் என்றால் என்ன? என்பது பற்றியும் சோஷியலிசத்தை எப்படிக் காண்பது என்பது பற்றியும் சோஷியலிச தத்துவம் அறிந்தவர்கள், சோஷியலிசத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதிலே வெற்றி கண்டவர்கள், கூறியுள்ளனர்.

காமராஜர் இந்தக் கருத்துக்களை அல்ல-சோஷியலிசம்பற்றிக் காங்கிரஸ் கொண்டுள்ள கருத்தைத்தான் கூறுகிறார்.