பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

இது அல்லவே சோஷியலிசம் என்று கூறுகின்றனர்; சோஷியலிச தத்துவத்துக்கும் நீங்கள் சொல்லுவதற்கும் பொருந்தவில்லையே என்று விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்; அதுபற்றி எமக்குக் கவலையில்லை; தத்துவம் பேசுபவர்கள் அல்ல நாங்கள்; நாங்கள் கூறும் சோஷியலிசம் இப்படித்தான்! போ! போ!!—என்று கூறிவிடுகிறார் காமராஜர்.

மண்டலத்தைக் கேட்டால், இது ஒரு மாதிரி சோஷியலிசம் என்கிறார்.

சோஷியலிசம் மாதிரிதான் இது என்கிறார் வேறோர் காங்கிரஸ்காரர்.

தம்பி! இப்போது புனிதப் பயணத்தின் புகழ் பாடி, நம்மோடு இருந்தபோது. சோஷியலிசம் மாதிரி என்று காங்கிரஸ் கட்சி ஆவடியில் திட்டம் கூறினபோது முழக்கமிட்டது என் காதில் இப்போது கூட ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சோஷியலிசம் மாதிரி!
குதிரை மாதிரி!
குதிரை மாதிரி என்றால் என்ன பொருள்? கழுதை என்று பொருள்.


அப்படிப் பேசிவிட்டு இப்போது இப்படி இருக்கலாமா என்று என்னைக் கேட்காதே தம்பி! பயில்வான் போல இருந்தான் இப்போது எலும்புருவாகிவிட்டானே ஏன் என்று கேட்டால், என்ன பதில் கூறுவது; கெட்ட கிருமிகள் கொட்டிவிட்டன என்றுதானே, அதுபோல, அது கிடக்கட்டும்; காமராஜர், பேசிடும் சோஷியலிசம் பற்றிப் பார்ப்போம். அவர் பேசுவது சோஷியலிசம் அல்ல! பதர்; நெல் அல்ல!!—ஏன்? பொருள் இல்லை; பயன் இல்லை.

இதனை எல்லோராலும் உணர்ந்துகொள்ள முடிந்தாலும் எடுத்துக் கூறிடும் இயல்பு அனைவருக்கும் இருந்திடாது; அந்த இயல்பு இருந்திடினும், அச்சம், தயைதாட்சணியமின்றி அதனை எடுத்துக் கூறுவோரின் தொகை அதிகம் இருக்க முடியாது.

ஏழைக்காகப் பரிந்து பேசுவது.
ஏழைக்கு இயன்ற அளவு உதவி செய்வது.