185
ஏழையும் ஓரளவு நிம்மதியான வாழ்வு பெற வழி காண்பது,
ஏழைக்குத் தொழிலும் வருவாயும் கிடைக்கச் செய்வது,
ஏழையை ஏழை என்பதற்காக இழிவாக நடத்தாமலிருப்பது,
ஏழைக்கு, குடி இருக்க வசதி, படிப்பு வசதி, மருத்துவ வசதி தேடிக்கொடுப்பது,
இவைகளைச் செய்துவிட்டால் போதும். அதுதான் சோஷியலிசம் என்று எண்ணிக்கொள்ளச் சொல்லுகிறது, காங்கிரஸ் கட்சி.
காய்ச்சல் காரணமாக வாய்க்கசப்பு கொண்டவன் நாவில், ஒரு துளி தேன் தடவிவிடுவது போன்றது இது.
தானதருமம் செய்வது, சத்திரம் சாவடி கட்டுவது, கோயில் குளம் அமைப்பது, கல்விக் கூடம் கலியாண மண்டபம் கட்டுவது, இவைகளைச் செய்தால் போதும் அதுதான் சோஷியலிசம் என்று எண்ணிக்கொள்ளச் சொல்கிறார்கள்.
இந்த உதவிகளை—தருமங்களை—தனிப்பட்ட ‘முதலாளிகளை’ச் செய்யச் சொல்லி வற்புறுத்துவதும் முதலாளிகளிடம் வரியாகவும் நன்கொடையாகவும் பணம் பெற்று சர்க்கார் இந்த உதவிகளைச் செய்வதும் போதும், சோஷியலிசம் அதுதான் என்று காமராஜரைச் சொல்ல லைத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.
ஆனால், சோஷியலிசம் என்பதற்கு தரப்பட்டிருக்கும் விளக்கம் வேறு; அதனைப் பார்க்கும்போது மன எழுச்சியே ஏற்படும்.
உடலிலே படிந்துள்ள சேற்றினைக் கழுவிக்கொள்ள ஒரு பானைத் தண்ணீர் தரச் சொல்லி ‘உபதேசம்’ செய்வதைச் சோஷியலிசம் என்று காங்கிரஸ் கூறுகிறது. சோஷியலிசம் உடலிலே சேறு படியாத நிலையை ஏற்படுத்த என்ன வழி, யாது முறை என்பதை எடுத்துக் காட்டும் திட்டமாகும்.