186
“கொடு!” என்று முதலாளிகளிடமும், “பெறு” என்று ஏழையிடமும் கூறுவதும். “அவ்வளவு இருக்கிறதே . கொஞ்சம் கொடு!” என்று பணக்காரரிடமும், “இவ்வளவு கிடைத்ததே. திருப்திப்படு” என்று ஏழையிடமும் பேசி, இருவர்க்கத்துக்கும் இடையே நின்று இருவருக்கும் இனிப்பாகப் பேசிவருவதை, சோஷியலிசம் என்று காங்கிரஸ் கட்சி கருதிக் கொள்கிறது! கருதிக்கொள்ளச் சொல்லுகிறது. சோஷியலிசத் தத்துவமும், முறையும் வேறாக இருக்கிறதே என்று கூறினாலோ, கோபம் பொத்துக்கொண்டு வருகிறது—புரியாததால் அல்ல—புரிவதால்!!— எங்கள் சோஷியலிசம் இதுதான் என்று கூறிவிடுகிறார்கள். இதுபற்றிப் பிறகு எழுதுகிறேன்.
புரோகிதன், நம் வீட்டுக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவரச்சொல்லி, செம்பிலே நிரப்பி, ஒரு கொத்து மாவிலையைச் செருகி, இதிலே இருப்பது, கங்கா, யமுனா. சரஸ்வதி ஆகிய நதிகளின் புண்ணிய தீர்த்தம் என்று சொல்லும்போது, இது ஏன் இப்படி ஒரு அண்டப்புளுகு! என்று கேட்கிறார்களா—நன்றாகத் தெரியும், நம்முடைய வீட்டுக் கிணற்றுத் தண்ணீர்தான் என்பது— இருந்தாலும் புரோகிதர் பொய்யுரைக்கும்போது மறுப்பதில்லையே!! ஆம்! என்று ஒப்புக் கொள்கிறார்களல்லவா? அதுபோல நெடுங்காலமாக—இங்குமட்டும் அல்ல—நாகரிக அரசியல் வளர்ந்த எல்லா நாடுகளிலும் ஈவு இரக்கம், பரிவு பச்சாத்தாபம், தானம் தருமம் என்ற பண்புகள் இருந்து வந்தனவே, அவைகளையே எடுத்து தமது கட்சி முத்திரையிட்டு, இதுதான் சோஷியலிசம் என்கிறது காங்கிரஸ் கட்சி. கிணற்றுத் தண்ணீர் கங்கா தீர்த்தம் ஆகிவிடுகிறது!!
30-5-1965
அண்ணன்,
அண்ணாதுரை