பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காஞ்சிக் கடிதம் : 21

கங்கா தீர்த்தம்-2



எல்லாம் எல்லாருக்கும் என்பதே சோஷியலிசம்
மாங்காய் மாலை போன்றது காங்கிரஸ் பேசும் சோஷியலிசம்
அமெரிக்க முதலாளிகளை மேத்தா அழைக்கிறார்
காங்கிரஸ் சோஷியலிசம் முதலாளிகளைக் கொழுக்க வைக்கிறது
ஜான் நை ஹார்ட்டின் எழுச்சிக் கவிதை

தம்பி,

ஏழைக்கு இதம் செய்திடவே செல்வவானிடம் பணம் ஆண்டவனால் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. செல்வவான்கள் ‘தர்மகர்த்தாக்கள்’ அவர்களிடம் சேர்ந்திடும் செல்வம் அவர்களுடைய சுகபோகத்துக்காக அல்ல என்ற கருத்தை, மெத்தக் கனிவுடன், கேட்போர் உள்ளம் உருகும் விதத்தில் எடுத்துரைத்தவர்களில் காந்தியாருக்கு நிகர் எவரும் இல்லை என்றே கூறலாம்.

பண்புகள் குறித்து எடுத்துரைத்த மேலோர் அனைவருமே இத்தகு கருத்தினை வலியுறுத்தி வந்தனர். இதனை மறுத்தவர் எவரும் இல்லை; அதுபோன்றே இதனை முழுக்க முழுக்க ஏற்றுக்கொண்டு அந்த நெறி நின்றவர்களும் இல்லை.