188
ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம், செல்வவான் மோட்ச சாம்ராஜ்யத்தில் நுழைய முடியாது.
என்ற அருள்மொழியை அறிந்து, ஒப்புக்கொண்டு, உள்ளம் உருக அதுபற்றிய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மேனாட்டினர்; அதன் காரணமாக அவர்கள் உடைமைகளைத் தேடிப்பெறுவது, உல்லாச வாழ்க்கையில் ஈடுபடுவது என்பவைகளை விட்டொழித்தனரா? இல்லை! உபதேசம் கேட்பது ஞாயிற்றுக்கிழமைகளில், உடைமைகளைப் பெற அலைவது மற்ற நாட்களில் என்று முறை வகுத்துக்கொண்டனர்!!
முற்றுந்துறத்தல், தன்னலம் மறுத்தல், பிறர் நலம் பேணுதல், ஊருக்குழைத்தல், ஈதலில் இன்பம் கண்டிடல். கூடி வாழ்தல்—இவைகளைப் போற்றிட எவரும் தவறியதுமில்லை; இவைகளின்படி ஒவ்வொருவரும் வாழ்ந்து சமூகத்தின் தன்மையை மாற்றி அமைப்பதிலே முழு வெற்றி கண்டவர்களும் இல்லை. சிலர் அந்த முயற்சிகளை மேற்கொண்டனர்; ஆனால், துவக்க காலத்தூய்மை, நாளாகவாகத் தேய்ந்து தேய்ந்து மாய்ந்தே போய்விட்டது; அருளகமாகத் துவக்கப்பட்டவைகள் பிறகு ஆதிக்க பீடங்களாக, மடாலயங்களாக மாற்றப்பட்டுவிட்டன.
இந்நிலை மேனாட்டில் மட்டுமா கீழ்நாடுகளிலுமா என்ற கேள்விக்கே இடமில்லை, எங்கும் இந்நிலை; அளவில், வேகத்தில், தரங்கள் இருக்கலாம், போக்கிலே ஒரேவிதமாகத்தான் இருந்தது.
ஏன் உபதேசங்களைப்பற்றி இப்போது கூறுகிறேன் என்று கேட்பாய் தம்பி! காங்கிரஸ் பேசிவரும் சோஷியலிசம், உபதேச பாணியில் இருக்கிறதல்லவா, அந்த உபதேசம் பலன் தராது. ஏனெனில், இன்றையக் காங்கிரஸ்காரர்களைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு அதிகமான தூய்மையாளர்கள், இன்று இவர்கள் செய்வதைவிட மெத்த உருக்கத்துடன் செய்த உபதேசங்கள் யாவும், பூஜாமாடத்துக்கு உரிய ஏடுகளாய், பாடல்களுக்கான கருப்பொருளாய்ப் போய்விட்டன–ஏழை–பணக்காரன் எனும் பொல்லாங்கு மூட்டிவிடும் பேதத்தைப் போக்கவில்லை; போக்கிட முடியவில்லை?