பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

189

அருளாளர் என்று விருது பெற்றோரின் உபதேசம் மூலம், ஏழையின் இன்னலைத் துடைத்திட முயன்று பார்த்து அது தக்கபலன் தராது போனது கண்டபிறகே, மேனாட்டு அறிவாளர்கள் சிந்தித்துச் சிந்தித்து, சோஷியலிசம் எனும் சமதர்ம முறையைக் கண்டறிந்து கூறினர்.

நல்ல இதயம், உயர்ந்த பண்பு இவைகளிலிருந்து எழுந்ததுதான் சோஷியலிச முறை என்றாலும் இதயம் நல்லதாக்கப்பட வேண்டும் என்ற நல்லுரையே, சோஷியலிசம் காணும் வழி என்று சோஷியலிசக் கருத்தளித்த வித்தகர்கள் கூறிடவில்லை.

அய்யோ பாவம்!
அவனும் மனிதன்!
ஏதோ செய்வோம்!
போகிற கதிக்கு நல்லது!
கொண்டு செல்லவா முடியும்!
கொடுத்தால் குறையாது!
ஒன்றுக்கு ஒன்பது கிடைக்கும்!

என்பன போன்ற பேச்சுகளும், அவைகளுக்கான மனப்போக்கும் இன்று நேற்று ஏற்பட்டவை அல்ல, நெடுங்காலமாக இருந்து வருபவை.

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆகும் என்ற கருத்தை வலியுறுத்தி எழுதப்பட்ட கதைகளும், புனையப்பட்ட புராணங்களும், கொஞ்சமா!

தம்பி! ஊருக்கு ஒரு உபகாரமும் செய்தறியாதவனாம் ஒருவன். அவன் இறந்து மேலுலகம் சென்றான்—படித்த கதையைச் சொல்லுகிறேன்; பார்த்ததை அல்ல!—அவன் இறந்தபோது, ஒருவருக்கு ஒரு உதவியும் செய்யாத இவன் நரகம்தான் செல்வான் என்று ஊரார் பேசிக் கொண்டனர்—ஆனால், அவனைத் தேவ தூதர்கள் பொன்னுலகம் கொண்டு சென்றனராம்—கணக்குப் பார்க்கப்பட்டது—“இவனுடைய ஆள் காட்டி விரலுக்கு மாலை மரியாதைகள் நடத்தி இவனைச் சிறிது காலம் பொன்னுலகில் இருந்திடச் செய்திடுக! அனைவரும் இவனுடைய ஆள்காட்டி விரலைக் காணட்டும்; மகிழட்டும்; போற்றிப் புகழட்டும்” என்று தேவதேவன் கட்டளையிட்டானாம்.