191
நடத்திச் செல்லும் காங்கிரசிலே சோஷியலிசம் வேறு எப்படி இருக்க முடியும்?
மறைந்த மாமேதை நகைச்சுவை மன்னர் என். எஸ். கிருஷ்ணன் நடித்துக் காட்டிய ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது—அதன் தொடர்பான கதை நினைவிலே இல்லை.
ஒரு இடத்தில், மாங்காய் மாலை கொடுக்க வேண்டி வருகிறது; மாங்காய் மாலை என்பது, பொன்னால் செய்யப்பட்ட மாங்காய் உருவ பில்லைகளில் கல்லிழைத்து, சரமாக்கி மாலையாகப் போட்டுக்கொள்ளும் விலை அதிகமுள்ள ஆபரணம்! இதைக் கொடுக்கவேண்டி வருகிறது; கொடுக்க வசதி இல்லை; அவ்வளவுக்குப் பணம் இல்லை!! எனவே ஒரு தந்திரம் புரிகிறார், நகைச்சுவையுடன்,
ஒரு ரோஜா மாலை, ஒரு மாங்காய் எடுத்துக்கொண்டு போய், இதோ மாங்காய், இதோ மாலை, மாங்காய் மாலை; வந்து கேட்டால் சொல்லிவிடுங்கள். மாங்காய் மாலை கொடுத்தாகிவிட்டது என்று, என்பதாகக் கூறிவிடுகிறார்.
அந்த ‘மாங்காய் மாலை’ போன்றது தம்பி! காங்கிரசார் இன்று பேசும் சோஷியலிசம்!! புரிகிறதா என்று கோபம் கொள்ளாத காங்கிரஸ்காரர்களைக் கேட்டுப்பார்.
இதனைக் கூறுவதால், உதவி செய்வது, தான தருமம் செய்வது கூடவே கூடாது என்று நான் சொல்லுவதாக எண்ணிக்கொண்டு விடக்கூடாது. சிலர் இருக்கிறார்கள். இந்த வாதத்தையே தமக்குச் சாதகமாக்கிக்கொண்டு, இந்தவிதமான உதவிகளைச் செய்வதாலே எந்தவிதமான உருப்படியான பலனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை, ஆகவே, ஒருவருக்கும் ஒருவிதமான உதவியும் செய்யத் தேவையில்லை என்ற போக்கை மேற்கொள்பவர்கள்.
நான் சொல்ல வந்தது அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்த அல்ல. உதவி செய்வது சோஷியலிசமாகாது, சோஷியலிசம் என்பது, புதிய சமூக அமைப்பு முறை, புதிய அரசியல் அமைப்பு முறை, புதிய பொருளாதார அமைப்பு முறை என்பதையும், அதனை நோக்ககாகக் கொண்டது அல்ல, காங்கிரஸ் கட்சி பேசிவரும் சோஷியலிசம் என்பதையும் கூறுகிறேன்.