பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

மண் குதிரை மீதேறிக்கொண்டு ஆற்றில் இறங்குவது என்பார்களே அது போன்றது காங்கிரஸ் பேசி வரும் சோஷியலிசம்.

காங்கிரஸ் பேசிவரும் சோஷியலிசம் தமது உடைமைகளை, ஆதாயம் தேடித்தரும் அமைப்புகளை, அதனால் கிடைத்திடும் ஆதிக்கத்தை எந்தவிதத்திலும் கெடுத்து விடாது என்று நன்றாகத் தெரிந்திருப்பதாலேயே, இன்று எல்லாப் பெரிய புள்ளிகளும் காங்கிரசிலே இருக்கின்றனர். அவர்கள் என்ன ஏமாளிகளா! ஜாண் பணத்துக்கு முழம் புத்தி என்று கிராமத்திலே பேசிக் கொள்வார்கள்!!

உள்நாட்டு முதலாளிகள் மட்டுமல்ல, காங்கிரஸ் பேசி வரும் சோஷியலிசம் தங்கள் உடைமைகளையும் பணம் தேடும் உரிமையையும் ஒரு துளியும் பாதிக்காது என்ற அழுத்தமான நம்பிக்கை வெளிநாட்டு முதலாளிகளுக்கும், நிரம்ப ஏற்பட்டிருக்கிறது; கோடி கோடியாக, முதல் போடுகிறார்கள், புதிய புதிய தொழில்களிலே!

ஏழை எக்கேடோ கெடட்டும் என்ற போக்கில், வெள்ளைக்காரன் முதலாளித்தனத்தை வளர்த்து வந்தான் என்று கூறினோம். வெள்ளைக்கார ஆட்சி போனபிறகு, அவன் காலத்திலே ஏற்பட்டிருந்த முதலாளி ஆதிக்கம் ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? கேட்டுப்பார், உண்மையை ஒளிக்காமல் பேசும் இயல்புள்ள காங்கிரஸ்காரர் எவரையாவது பார்த்து; எந்த அளவுக்கு வெள்ளைக்காரன் காலத்திலே அமைக்கப்பட்ட முதலாளித்தனம் ஒடுக்கப்பட்டிருக்கிறது என்று. தலையைக் கவிழ்ந்து கொள்வார்! ஏன்? ஒடுக்காதது மட்டுமல்ல, வெள்ளைக்காரன் காலத்திலே இருந்ததைவிட மூன்று மடங்கு அளவு வளர்ந்துவிட்டிருக்கிறது முதலாளித்தனம்-காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் - சோஷியலிசம் பேசும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்.

வெள்ளையராட்சி விலகும் போது 1947ல், இங்கு முதலாளிகள், தொழில்களில் போட்டிருந்த மூலதனம் 700 கோடி ரூபாய் என்று கணக்கெடுத்தனர்.

சுயராஜ்யம் அமைந்து சோஷியலிசம் மலர்ந்திருப்பதாகக் கூறுகிறார்களே, அதன் காரணமாக, முதலாளி தொழிலில் போட்ட பணம் குறைந்ததா?