பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

இரு திங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூடி ஒரு காங்கிரஸ் சோஷியலிச மாநாடு நடத்தி, சோஷியலிசத் திட்டத்தை அக்கறையுடனும், தீவிரமாகவும் நிறைவேற்றும்படி காங்கிரஸ் ஆட்சியை வற்புறுத்திப் பேசினர்.

காங்கிரஸ்கட்சி, உள்ளபடி சோஷியலிசத்தின் வழி நடப்பதானால், சிலர்கூடி, ஏன் வற்புறுத்த வேண்டும்! காங்கிரசுக் கட்சியிலேயே, சோஷியலிச வழி நடப்பதாகக் கூறும் ஒரு பிரிவும், சோஷியலிச வழி நடக்கவில்லை என்று குறைகாணும் ஒரு பிரிவும் இருக்கிறது; காமராஜர் இந்த இரண்டு பிரிவிலும் இருக்கிறார்!

தம்பி! சோஷியலிசத் தத்துவத்தின் அடிப்படை, தொழில்கள் உற்பத்தியைப் பெருக்கவேண்டும், அந்த உற்பத்தி மக்களின் வசதிகளை அதிகப்படுத்தப் பயன்பட வேண்டுமேயன்றி, முதலாளிகளின் இலாபத்தைப் பெருக்கிடப் பயன்படக் கூடாது என்பதாகும்.

அதன்படி நடந்திருக்கிறதா என்பதைக் கண்டிட, ஒரு கணக்கினை ஆராய்வோமே!

இந்துஸ்தான் மோட்டார் கம்பெனி தெரியுமல்லவா—காங்கிரஸ் தேர்தல் நிதிக்கு 20 இலட்ச ரூபாய் நன்கொடை கொடுத்த அமைப்பு—அதனுடைய மூலதனம் 7 கோடியே 79-இலட்சமாம்.

அந்தக் கம்பெனிக்கு ஒரே வருடத்தில்—1960ல்—கிடைத்த இலாபம் 2,85,71,127 ரூபாய் என்று கணக்குத் தந்திருக்கிறார்கள். பார்த்தனையா, காங்கிரசின் சோஷியலிசம் கொண்டுள்ள கோலத்தை!!

டாட்டா கம்பெனிக்குக் கிடைத்த இலாபம் 5 கோடியே 77 இலட்சமாம்!

ஒரிசா மாநிலத்தில் இருக்கிறதே—இப்போது அதன் பெயர் ‘பாரதம்’ முழுவதும் அடிபடுகிறதே கலிங்கா கம்பெனி, அதற்கு ஒரே வருஷத்தில் கிடைத்த இலாபம் 26 இலட்சம்! இப்படி இலாபம் திரட்டிக் கொள்ள இடமளித்துவிட்டு, சோஷியலிசம் பேசுகிறது காங்கிரஸ் கட்சி!