195
துரைத்தனமே அமைத்த ஒரு குழு, மக்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.
ஒரு நாளைக்கெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே வேலை கிடைக்கிறதாம்—மற்ற நேரத்தில் வேலை தேடி அலைகிறார்கள்—கிடைக்காமல் திண்டாடுகிறார்களாம் 270 இலட்சம் மக்கள்! இந்த ஒரு மணி நேர வேலையில் கிடைக்கும் கூலியைக் கொண்டு எப்படி வாழ முடியும்? வதைபடுகிறார்கள், அரைப்பட்டினியாக.
ஒரு நாளைக்கெல்லாம் இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே செய்வதற்கு வேலை கிடைக்கிறது 200 இலட்சம் மக்களுக்கு;
ஒரு நாளைக்கு ஐந்தணா மட்டுமே கூலியாகப் பெற்று வாழவேண்டிய பரிதாபம் 600 இலட்சம் மக்களுக்கு; நாலணா பெறுபவர்கள் 400 இலட்சம்; இவை சர்க்கார் நியமித்த அமைப்பு கொடுத்துள்ள கணக்கு, நான் இட்டுக் கட்டியது அல்ல.
டாட்டா, பிர்லா கோடி கோடியாகக் குவித்துக் கொண்டிருப்பதும், குப்பனும் சுப்பனும் கூலி போதாமல் குமுறிக் கொண்டிருப்பதும், சோஷயலிசம் அல்ல!!
இத்தகைய பயங்கரமான பேதத்தைப் போக்குவதுதான் சோஷியலிசம்.
ஆனால் சோஷியலிசம் பேசும் காங்கிரசின் ஆட்சியில் மக்களிடையே காணக்கிடக்கும் பொருளாதார பேதம் விரிவாகிவிட்டிருக்கிறது; ஆழமாகியும் விட்டிருக்கிறது.
- இதனை சர்ச்காரே அமைத்த மகனாலோபிஸ் குழுவினர் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஏழை—பணக்காரன் பேதத்தைப் பயங்கரமான அளவு வளர்த்துவிட்டவர்கள், வளர்த்துக்கொண்டு வருபவர்கள் சோஷியலிசம் எமது திட்டம் என்றும் பேசுகிறார்கள்! விந்தையை என்னென்பது?
நானும் சைவன்தான் என்று பேசினானாம், ஆட்டு இறைச்சியின்றி ஒருவேளைகூட இருக்க முடியாதவன்.