196
வியப்பாக இருக்கிறதே ! நீயா சைவன்? என்று கேட்டானாம் நண்பன்! ஆமாம்! அதிலென்ன சந்தேகம்! புல். பச்சைத்தழை இவைதானே ஆடு தின்கிறது, அதை நான் தின்கிறேன் என்றானாம். அது வேடிக்கைப் பேச்சு. காங்கிரஸ் ஆட்சியினர் முதலாளித்துவத்தை வளர்த்துக் கொண்டே சோஷியலிசம் பேசுகிறார்கள்; தங்கள் நாணயத்தை எவரும் சந்தேகிக்கக்கூடாது என்றும் கூறுகிறார்கள்—கூறுகிறார்களா!! கட்டளையிடுகிறார்கள்!
இவ்விதம் பேசுவது காங்கிரசின் எதிரிகளின் போக்கு என்று கூறித்தப்பித்துக்கொள்ள முயற்சிப்பார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.
தம்பி! நான் எடுத்துக்காட்டிய இந்தக் கருத்துரைகள் சில காங்கிரஸ்காரர்களே பேசியவை.
உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு காங்கிரஸ்காரர் அன்சர் ஹர்வாணி என்பவர். அவர் மனம் நொந்து பேசியிருக்கிறார்:
- சோஷியலிச வழியிலே காங்கிரஸ் அரசு செல்லவில்லையே!
- கொள்ளை இலாபமடிக்கும் முதலாளிகளின் கொட்டத்தை அடக்குவதற்குப் பதிலாக அவர்களுடன் கூடிக் குலவுகிறீர்களே! இது அடுக்குமா!
- வரிகொடுக்காமல் ஏய்க்கும் வணிகக் கோமான்கள் இருக்கிறார்கள்; அவர்களைப் பிடித்திழுத்துத் தண்டிக்காமல், அவர்களின் மாளிகைகளிலே விருந்துண்ணச் செல்கிறீர்களே! நியாயமா?
என்றெல்லாம் கேட்டிருக்கிறார்.
சோஷியலிசம்கூட அல்ல, காந்திய வழியிலே கூடச் செல்லவில்லையே, முறையா? கைகூப்பி, மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன், காந்திய வழியிலே நடவுங்களய்யா என்று காங்கிரஸ் ஆட்சியினரைக் கேட்டுக்கொள்கிறார் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்துவந்த தேபர்.