பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

போகிறார்கள் என்ற ஐயப்பாடு கொள்ளாமல், நாம் உணர்ந்ததை உரைப்பது நமது கடமை என்ற பொறுப்புணர்ச்சியுடன் பெங்களூர் விஞ்ஞானத் துறைக் கல்லூரியினர் மொழி பற்றிய தமது கருத்தினை லால்பகதூருக்குத் தெரிவித்தது கண்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்று இவர்கள் கூறிடும் கருத்தினை, ‘சிறுபான்மையினர்’ கருத்து என்று லால்பகதூர் கருதிவிடக்கூடும். ஆனால், இந்தக் கருத்து இதுவரையில் வாளாயிருந்த எத்தனை எத்தனையோ இலட்சக்கணக்கானவர்களை ஈர்த்துக் கொண்டுவிடும் என்பதில் ஐயம் இல்லை. ஏனெனில் ஆளவந்தார்களின் கட்சியிலேதான் பலர், அருவருப்பு, அச்சம் காரணமாக, அறிவாளர்களின் கருத்தை மதித்திட மறுக்கின்றனர். பொதுமக்கள் அந்த விதமான போக்கில் இல்லை. அவர்களுக்கு அறிவாளர்கள் பற்றியும் தெரியும், ஆளவந்தார்களின் ஆலவட்டங்களைப் பற்றியும் நன்றாகத் தெரியும். கேட்கலாமே அவர்களின் பேச்சை, சிற்சில வேளைகளில்;

யாரு! கொளந்தையப்பனா! தெரியுமே! தெரியும்!! கொளத்தங்கரைத் தெரு! அடே அப்பா! அது சின்ன புள்ளையிலே ஊர்லே போட்ட ஆட்டம் கொஞ்சமா! அது அப்பன் பொத்தகம் வாங்கப் பணம் கொடுத்தா, “இது பொட்டலம் வாங்கிட்டுப் பொடியன்களோட பொழுதை ஓட்டும்”

என்று ஆரம்பித்து, வாழ்க்கை வரலாற்றை விளக்குவதை.

பொதுமக்கள், கூறப்படும் கருத்தை, கவனிக்க மறுப்பதில்லை. ஆகவே, நமது கருத்து நாடாள்வோரால் தள்ளப்பட்டுவிடினும் நாட்டினரால் வரவேற்கப்படும் என்ற நம்பிக்கையுடன், விவரம் அறிந்தவர்கள், விளக்கம் பெற்றவர்கள், உண்மையை அஞ்சாது உரைத்திடவேண்டும். உரைத்து வருகின்றனர்.

கருத்தளிப்பவர் சிறுபான்மையினரா பெரும்பான்மையினரா என்பதல்ல முக்கியமாகக் கவனிக்கப்படத்தக்கது. அளிக்கப்பட்ட கருத்து ஏற்புடையதா அல்லவா என்பது தான் மிக முக்கியம்.