பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

மக்களின் இதயம் நம்மிடம் என்ற எண்ணத்தை மட்டுமே நாம்கொண்டிருந்தால் போதாது; அதனைக் கெடுத்திடத்தக்கன தேர்தல் நேரத்தில் என்னென்ன கிளம்பக்கூடும் என்பதனைக் கண்டறியவும், தடுத்திடவும், அவைகளை மீறி, வெற்றி கிடைத்திடவுமான முறையில் பணியாற்ற வேண்டும்,

காங்கிரஸ், ஆளுங்கட்சியாகிவிட்ட பிறகு, ஆதாயம் தேடுவோர், தாமாக அதிலே நுழைந்துகொள்ளவும், நட்புத் தேடவும் முற்பட்டுவிட்டனர்.

காங்கிரஸ் ஆட்சி நடத்தினால் மட்டுமே, தமது நிலைமை பாதுகாக்கப்படும் என்று உணர்ந்த செல்வவான்கள், தேர்தலின் போது, காங்கிரசின் பக்கம் திரண்டு நிற்கிறார்கள்.

மகாத்மாவின் காங்கிரஸ் தனது தூய்மையைக் காட்டி மக்களின் இதயத்தை வென்றது என்றால், ஆளுங்கட்சியாகிவிட்ட காங்கிரஸ், தன்னிடம் உள்ள சலுகை தரும் சக்தியைக்காட்டி ஆசை ஊட்டவும் கெடுத்துவிடும் வலிவைக்காட்டி மிரட்சியை மூட்டிவிடவும் செய்கிறது.

காந்தியாரின் காங்கிரசைக் கண்ட பொதுமக்களின் கண்களில் நீர் துளிர்த்தது—பக்தியால், பாசத்தால்.

இன்றைய காங்கிரசைக் காணும் பொது மக்களின் கண்களில், மிரட்சி தெரிகிறது, எதிர்த்தால் என்னகெடுதல் வந்துவிடுமோ என்ற எண்ணத்தால். இந்த நிலையை மீறி, இதயம் பேசவேண்டும்; எளிதானது அல்ல!!

தம்பி! நான் குறிப்பிட்டுக் காட்டினேனே, பட்டக்காரர், வாண்டையார், நெடும்பலத்தார் என்றெல்லாம்; அவர்களின் ‘ரகம்’ ஒவ்வொரு வட்டத்திலும் உண்டு. அவர்களில் பெரும்பாலோர் முன்பு காங்கிரசை எதிர்த்து நின்றவர்கள், தங்கள் நிலைமைகளை, சொத்து சுகத்தை, அதிகாரம் அந்தஸ்துகளைக் காப்பாற்றிக்கொள்ள. அதனாலே மிகுந்த கஷ்ட நஷ்டத்துக்கு ஆளானவர்கள்.

அவர்களைக் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது, தன் தூய்மையை இழந்ததால்.