98
போகட்டும் இதற்காகவேனும், இவர் நக்கீரர், கபிலர், இளங்கோ போன்றார்பற்றி அறிந்துகொள்ள வாய்ப்புக்கிடைப்பது குறித்து நான் உள்ளபடி மகிழ்கிறேன்.
‘முதியோர் கல்வி’யில் பலவகை உண்டு; அதில் இது ஒருவகை என்றெண்ணி மகிழ்கிறேன்.
பெறவேண்டிய ‘பாடம்’ துவக்கத்தில் கிடைக்காமற் போயினும், தமிழகம் கொண்டிருந்த புலமையும், கோலோச்சிய தன்மையும், பெற்றிருந்த வளமும், பின்னர் அதனை இழந்ததன் காரணமும் அறிந்திடவும், அறிந்ததன் பலனாகவே, மீண்டும் தாழ்ந்த தமிழகம் எழுச்சி பெறுவதற்கான திட்டம் காணவேண்டும் என்று எண்ணவும், உள்ளத்தில் ஆவல் அரும்பும்! இது என் நம்பிக்கை.
நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே!—என்று கூறிடும் அளவுக்கு நெஞ்சு உரம், தமிழகத்தில் இருந்து வந்தது; காமராஜர் அறிந்து உரைக்கும் அளவுக்கு, அந்தக்காதை நாட்டிலே சர்வ சாதாரணமாகிவிட்டுமிருக்கிறது—எனினும், அத்தகைய தமிழகத்தில், காணக் கிடைக்கும் எல்லா வகையான ஆதாரங்களையும் கொண்டு பார்க்கும்போது, தேவிகுளம் பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழகத்துக்குத்தான் உரிமையான உடைமைகள் என்பது தெரிந்திருந்தும், அதனைத் தேசியப் பாசம் குன்றாமுறையிலும், தெளிவு தெரியும் வகையிலும் எடுத்துக் காட்டியும், டில்லி ஏற்க மறுத்ததே அதுபோது, நக்கீரம் பேசும் இந் நற்றலைவர் செய்தது என்ன? தமிழரின் உரிமையை மறுப்பவர், எவராயினும், எத்துணை ஏற்றம் பெற்றோராக இருப்பினும், கொற்றம் கொண்டு அதனையே கொடுமைக்குக் கருவியாக்கிக் கொண்டோராக இருப்பினும், நான் பணிந்திடுவேன் அல்லேன், பணிந்திடுதல் பண்புமல்ல, தமிழ் மரபுமாகாது, என்றா சீறிக்கிளம்பினார்!
தேவிகுளம் போனாலென்ன
வாவி குளம் வந்தாலென்ன
வாஞ்சனை போதுமய்யா, நேருவே!
வாய்திறவேனே, மெய்யாய்!என்று கண்ணி பாடிக் கிடந்திட்டாரே! இப்படிப்பட்டவர்களிடம் தமிழகம் சிக்கிய பிறகுதான், நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று கூறிடும் உள்ள உரம் உருக்குலைந்தது, எடுப்பார் கைப்பிள்ளைகளும், எனக்கென்ன