99
பங்கு என்று கேட்பவர்களும் கொலு வீற்றிருக்கத் தொடங்கினர், கோல் சாய்ந்தது, கோலம் கலைந்தது, ஞாலம் புகழ வாழ்ந்த தமிழர், நாமம் மட்டும் தமிழரெனப் பெற்று வாழ்ந்திடும் அவலம் பிறந்தது, அவதி மிகுந்தது.
எனவேதான், இதுகாலை தமிழரின் பண்டைய பெருமையினை எடுத்துக் காட்டியேனும், ஓர் புது எழுச்சி காணலாமா என்று தம்பி, நாமெல்லாம் எண்ணுகிறோம்.
தமிழ் இனம், பண்பு கெடாத நாட்களில் பாராண்ட பாங்குபற்றி, படிக்குந்தொறும் படிக்குந்தொறும் பாகெனச்சுவை அளித்திடும் பாக்களைக் காண்கிறோம்; பெருமூச்செறிகிறோம்.
கோடும் குவடும் பொரு தரங்கக்
குமரித் துறையில் படு முத்தும்
கொற்கைத் துறையில் துறை வாணர்
குவிக்கும் சலாபக் குவால் முத்தும்
ஆடும் பெருந்தண் துறைப் பொருனை
ஆற்றில் படுதெண் ணிலா முத்தும்
அந்தண் பொதியத் தடஞ்சாரல்
அருவி சொரியும் குளிர் முத்தும்!
என்று பாடுகிறார்கள்—உன் தமிழகம் முத்தும் மணியும் ஒளி தர விளங்கிய உயிரோவியம் என்பதனை அறிந்திடுக! என்று புலவர் பெருமக்கள், பொருளுரையும் பொழிப்புரையும் கூறுகின்றனர்—பழிப்புரை கேட்டும் பதைத்திடாதார் பரிபாலனத்திலே உள்ளோமே! முத்து கூத்தாடுமாமே முந்தையர் நாட்களில், வறுமை முடைநாற்றமன்றோ துளைக்கிறது என்று எண்ணுகிறோம், ஏங்கித் தவிக்கிறோம்!
“குன்றின் இள வாடை வரும் பொழுதெல்லாம்
மலர்ந்த திருக்கொன்றை நாறத்
தென்றல் வரும் பொழுதெல்லாம் செழுஞ்சாந்தின்
மணநாறும் செல்வவீதி....”
என்று கூறுகிறார் புலவர்—தமிழகத்தின் புகழ் மணம், கமழ்ந்திருந்த அந்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன. அந்தச் ‘செல்வவீதி’களிலே இன்று தேம்பித் தவித்தும், திண்டாடித் திகைத்தும், உழைத்து உருக்குலைந்தும், பிழைப்-