கடிதம்: 70
வீரத் தியாகி
சீர்கேடு—தமிழ்நாடு—பெயர் வைத்தல்.
தம்பி!
நடுநிசி! தூக்கம் வரவில்லை; துக்கம் துளைக்கிறது; வெட்கமும் வேலாகக் குத்துகிறது; கொழுந்து விட்டெரியும் பெருநெருப்பும், அதிலே கிடத்தப்பட்டுள்ள தியாகத்திருமேனியும், தெரிகிறது; தீ என்னைத் தீண்டாது, தீயோரின் பிடியிலிருந்து நான் விடுதலை பெற்றுவிட்டேன், தீரமற்றோரே! தெளிவற்றோரே! இனி தீ உங்களைத்தான் தாக்கும்! வெந்து வேதனைப்படுங்கள்! உணர்ச்சியற்ற உருவாரங்களே! உண்ண, உடுக்க, இருக்க, வழி கிடைத்தால் போதும் என்று எண்ணி, அவைதமைப் பெற ‘எடுபிடி’யாகவும், இழி நிலையைச் சகித்துக்கொள்ளவும் சம்மதித்துக்கிடக்கும் சத்தற்ற ஜென்மங்களாகிவிட்டீர், சடங்களே! கருகிப் பொடியாகட்டும், எனக்கென்ன! இதோ நான் கண்மூடி விட்டேன்! இனி உங்களைத் திரும்பிப்பாரேன்! செல்கிறேன், சிந்திக்கவும் செயலாற்றவும் திறனற்றுப்போன உம்மைக் காணக் கூசினேன், இந்த நிலை பெற்றீரே என்றெண்ணிக் குமுறினேன், இனி இவர்தம் கூட்டுறவு வேண்டாம் என்று துணிந்தேன், சாவை வரவேற்றேன்! நான் மறைகிறேன், நீங்கள் உலாவுங்கள்!! நான் இறந்துபடுகிறேன், நீங்கள் இளித்துக் கிடவுங்கள்! எனக்கு மானம்