103
பெரிது, உயிர் அல்ல; உயிரை இழக்கிறேன்! உலுத்தருக்கு உயிர்தான் வெல்லம், அதைச் சுமந்துகொண்டு திரியுங்கள்! சவத்துக்கும் உயிர் உள்ள சடத்துக்கும் என்ன மாறுபாடு? உணர்ச்சிதானே, இரண்டினையும் வேறுபடுத்திக் காட்டுவது! உணர்ச்சியற்றுக் கிடக்கும் உம்மை, மாந்தர் என்றும் மறத்தமிழர் என்றும் கூற என் நா, கூசுகிறது! இதோ இனி நான் பேசப்போவதில்லை! போகிறேன், பொல்லாங்கும் பழியும், புல்லர் வாழ்வும் பூசலும் நிரம்பிய இந்த இடத்தைவிட்டே அகன்று செல்கிறேன்! சாக்கடையில் நீங்கள் உழலுங்கள், சாக்காடு எனக்குச் சாந்தி அளிக்கட்டும்! பதைக்கிறீர்கள், துடிக்கிறீர்கள்; ஆஹா! என்கிறீர்கள், ஆகட்டும் என்று ஆர்ப்பரிக்கிறீர்கள்; யார் தெரியுமா என்று உருட்டுகிறீர்கள், என்ன செய்வேன் தெரியுமா என்று மிரட்டுகிறீர்கள்; எல்லாம், எதற்கு? ஒரு சிறு பொருள் உன் கரத்தை விட்டுப்போவதானால்! ஒரு சிறு சொல் உம்மீது எவனேனும் வீசுகிறானென்றால்! சுயநலத்துக்குக் குந்தகம் விளைகிறது என்றால், சூரத்தனமாகக் கிளம்புகிறீர்கள், போராடுகிறீர்கள்! தாயகம் பழிக்கப்படுகிறது, தாயகம் இழிநிலை பெறுகிறது, ஏன் என்று கேட்கும் துணிவு இல்லை உங்கட்கு! தாயகம் தருக்கரின் காலடியில் சிக்கிச் சீரழிகிறது; தடுத்திடும் ஆற்றல் இல்லை, உங்களுக்கு! மொழி அழிக்கப்படுகிறது, உமது விழியிலே நீர் சோரக்கூடக் காணோம். தன்மானம் அழிக்கப்படுகிறது, தடுத்திடக் கிளம்புகிறீர்களா? இல்லை! தாளேந்திக்கிடக்கிறீர்கள்! நத்திப் பிழைத்திடவும், நமக்கென்ன என்று ஒதுங்கிக்கிடக்கவும், நம்மால் ஆகுமா என்று பெருமூச்செறியவும் கற்றீரேயன்றிக் கடமை உணர்ச்சியை எங்கே கொண்டீர்! வீரர் வழி வந்தோரே! வெற்றி முரசு கொட்டினோரே! தமிழர்காள்! தரணி புகழப் பரணி பாடிய பரம்பரையினரே! கடலில் கலம்செலுத்தி, கரிப்படைகொண்டு கருங்கற்கோட்டைகளைத் தூளாக்கி, வேற்படைகொண்டு மாற்றாரை விரட்டி, வாகை சூடிய வெற்றி வீரர் வழிவந்தோரே! என்றெல்லாம், ஏடு உம்மைக்குறித்து குறிப்பிடுகிறது; நாடு நலியக் கண்டும், வலியோர் சிலர் எளியோர்தமை வாட்டிடக்கண்டும் வாய் திறந்து கேட்கவும் வக்கற்றுக் கிடக்கிறீர்! உம்மோடு, நான் இருக்கச் சம்மதியேன்! உம்மில் ஒருவனாக இருக்க என் மனம் இடம்தரவில்லை! நான் பிணமாகிறேன், பேசும் பிணங்களே! குடும்பம் அழைக்கிறது, சென்று குதூகலமாகக் காலங்கடத்துங்கள், குட்டவருவான் கொடியோன்! குனிந்து கிடவுங்கள். குறை கூறாதீர்கள், குண்டாந்தடியுடன் வருவான், கோலோச்சுவோரின் ஏவலன், இழிவாகப் பேசுவான், இனிமை, இனிமை! என்று கூறுங்கள்—இல்லையெனில் இருட்டறையில் தள்ளிப்பூட்டிவிடுவான்! வாழவேண்டுமே