பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

என்பீர், வாழுங்கள், வாழுங்கள், மானம் இழந்து, உரிமை இழந்து, உணர்ச்சி இழந்து, உயிரைச் சுமந்துகொண்டு உலவுங்கள்! என்னால் முடியாது! இதோ, நான் மரணத்தைத் தழுவிக்கொண்டேன்! மலர் தூவிய மஞ்சம் உமக்குக் கிடைக்கக்கூடும், மானத்தை இழந்த பலருக்குக் கிடைக்கும், எனக்கு இந்த நெருப்புப் படுக்கைபோதும்! பிடிசாம்பலாகிறேன்! பேதையாய், தலையாட்டிப் பதுமையாய், அடிமையாய்க் கிடந்து உழல்வதைக் காட்டிலும், பெருநெருப்புக்கு என்னை ஒப்படைத்துவிடுவது சாலச்சிறந்தது! எனவே, நான் செல்கிறேன், நீங்கள், பூச்சி புழுக்களும், சீச்சீ என்று இகழ்ந்திடும் விதத்தில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு கிடவுங்கள்!—என்று நம்மை நோக்கி, பெருநெருப்பில் கிடத்தப்பட்டுள்ள பெரியவர் பேசுவது போன்றதோர் பிரமை ஏற்படுகிறது! அவர் இதுபோலெல்லாம் நம்மை ஏசி இருக்கக்கூடாதா—ஏசியிருந்தாலாவது, ஒரு வகையில், நன்றாக இருந்திருக்கும்—அந்தப் பெருங்குணவான், ஒருதுளி ஏசினாரில்லை, நமது இழிநிலை கண்டு இரக்கப்பட்டு இறந்துபட்டேனும், நமக்கு உய்யும் வழி கிடைத்திடச் செய்வோம் என்று எண்ணினாரேயன்றி, ஏடா! மூடர்காள்! என்று சினந்துகொண்டாரில்லை! இறந்துபட்டார்—நமக்காக இறந்துபட்டார்—நாட்டுக்காக உயிர் துறந்தார்—நாமெல்லாம் நடைப்பிணமாகிவிட்டோம் என்பதறிந்து வேதனையுற்றார்—உயிர் துறந்தார்! உயிர் போகிறது—போய்க்கொண்டே இருக்கிறது என்று அறிந்தார்—விநாடிக்கு விநாடி. மரணவாயிலை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார் — சாவை வரவேற்றார்! நாம் வாழ்கிறோம்! வெட்கமின்றி, வாழ்ந்துகொண்டு கிடக்கிறோம்—வெந்து சாம்பலாகிவிட்டார் அந்த வீரத்தியாகி! எண்ணும்போது. இதயத்தை யாரோ சம்மட்டி கொண்டு தாக்குவது போலாகிவிடுகிறது. இந்த நடுநிசியில், என் நெஞ்சம் நடுக்குறுகிறது, எண்ணம் ஈட்டியாகிவிடுகிறது—எரிதழல், தெரிகிறது-தியாகியின் உடல் அதிலே கிடப்பது தெரிகிறது: ஓர் கேலிச் சிரிப்பொலிகூடக் கேட்கிறது—ஓஹோ! நீ விடுதலைப்படை வரிசையில் உள்ளவனல்லவா? உரிமை முழக்கமிட்டுக்கொண்டு ஊரூரும் அலைபவனல்லவா? தமிழர், தமிழர் என்று மார்தட்டித்தட்டிப் பேசுபவனல்லவா? அகம் என்பாய், புறம் என்பாய், ஆற்றல் என்று கூறுவாய், என் ஆன்றோர், சான்றோர் என்று புகழ்பாடுவாய், அல்லவா? என்று கேட்டுவிட்டுக் கேலிச் சிரிப்பொலி கிளப்பி என்னை வாட்டி வதைக்கிறது, நான் மனக்கண்ணால் காணும் அந்தக்காட்சி. இந்த நடுநிசியில், என்போல் இதுபற்றி எண்ணி எண்ணி நெஞ்சு புண்ணாகிக்கிடப்போர் எண்ணற்றவர்கள் என்பதும் தெரிகிறது. ஆனால் எனக்குத் துக்கம் மட்டுமல்ல;