பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

வெட்கம் என்றேன்! உண்மையிலேயே நான் வெட்கப்படுகிறேன்!—ஏனெனில் இத்தகைய வீரத்தியாக உள்ளம் கொள்ளமுடியுமா உன்னால் என்று எவரேனும் என்னைக் கேட்டுவிட்டால், நானென்ன பதில் அளிக்க முடியும்! தலையைக் கவிழ்த்துக் கொள்ளத்தான்வேண்டும்—பலகோடி மாந்தரில் ஒருவருக்கு மட்டுமே கிட்டக்கூடியது அந்த வீரத்தியாக உள்ளம், விருதுநகர் சங்கரலிங்கனார், அதனைப் பெற்றிருந்தார். பேதை நான், அதனை உணர்ந்துகொள்ளும் ஆற்றலும் பெற்றேனில்லை! அவர் இறந்துபடுவார் என்று எனக்கு எண்ணவே இயலாதுபோயிற்று. அவரை நான் கண்டேன்; எனினும்,. அவர் இறந்துபட நேரிடும் என்று எண்ணவில்லை—காரணம். நானோர் ஏமாளி. நாடு அவரை அந்தநிலை செல்லவிடாது, நாடாள்வோர் அவரைக் கைவிடமாட்டார்கள், அந்த அளவு கேவலத் தன்மை நாட்டைப் பிடித்துக்கொண்டில்லை, அவர் கடைசிக் கட்டம் செல்லும் வரையில்கூடக் கன்னெஞ்சம் கொண்டிருப்பர், பிறகோ, பழி பாவத்துக்கு அஞ்சியேனும், பிற்காலத்துக்குப் பயந்தேனும், அறிவுலகம் ஏசுமே என்று எண்ணியேனும், அவர் ‘சாவதை’த் தவிர்த்துவிடுவதற்கான தக்கமுறையினை மேற்கொள்வர், என்று என் பேதை நெஞ்சு எண்ணிற்று! பெருநெருப்புக் கிளம்பிற்று, அந்தோ! அந்த வீரத்தியாகியை அணைத்துக் கொண்டது — சங்கரலிங்கனார் நம்மைவிட்டுப் பிரிந்தார்.

எனக்கு, அவரை, இதற்குமுன் தெரியாது—நாடு அவர் புகழ் பாடிட, அவர், ‘நடுநாயகமாக’ இருந்திடவில்லை—எனினும் இன்று நடுநாயகங்களாகிவிட்ட பலருக்கு, அவர் போன்றாரின் ஆற்றல்மிக்க தேசத்தொண்டு பயன்பட்டு வந்திருக்கிறது. நீண்டகாலமாகக் காங்கிரசில் பணியாற்றியவர், காமராஜர் கதர் அணியக் கிளம்புமுன்பே, கைராட்டையில் நூல் நூற்றவர்; காந்தியார், மகாத்மா ஆகிக்கொண்டிருக்கும்போது, உடனிருந்து அந்த உயர்வு உருவாவது கண்டு உளமகிழ்ந்தவர்; வந்தேமாதரம், தேர்தல் தந்திரமானபிறகு அல்ல, அஃது தேசிய மாமந்திரமாக இருந்த காலத்திலேயே, அந்தக் குறளைக் கற்றுக்களித்தவர், ‘சிறை சென்று நலிந்தவர்’ வணிகத்துறையிலும் அவருக்கு வெற்றிதான்; சங்கரலிங்கனார், பழம் பெரும் தேசபக்தர் வரிசையைச் சேர்ந்தவர்.

இன்றைய நிதி மந்திரிகளுக்கும், சோப்புச் சீமான்களுக்கும், அவரைத் தெரிந்திருக்க முடியாது.


அ.க. 4 — 7