106
மாணிக்கவேலர்கள், அவர்பற்றிக் கேள்விப்பட்டிருக்க முடியாது.
நிச்சயமாக. சேதுபதிகளின் பார்வையில் அவர் பட்டிருந்திருக்க முடியாது.
இவர்களெல்லாம், நாடு குறித்துக் கவலைகொள்ளும் பக்குவம் பெறுவதற்குப் பன்னெடு நாட்களுக்கு முன்பே, சங்கரலிங்கனார் ‘சத்யாக்கிரகி’ ஆகிவிட்டார்! ஆனால், அவர் சபை நடுவே இடம் பிடித்திடும் ‘சத்காரியத்தில்’ ஈடுபடவில்லை! கமிட்டிகளைக் கைவசப்படுத்தும் வித்தையில் ஈடுபட்டாரில்லை! ‘தலைவர்’ ஆக மறுத்துவிட்டார்; தன்னலமறுத்து தாய்நாட்டுக்காகப்பணியாற்றி, விடுதலை விழாக்கண்டு வெற்றிக் களிப்புபெற்று, பெறவேண்டிய பேறு இதனினும் வேறு உண்டோ என்றெண்ணிப் பெருமிதம்கொண்டு இருந்த ஒரு பெரியவர்.
தாயின் மணிக்கொடி பாரீர்
அதைத் தாழ்ந்து புகழ்ந்து பணிந்திட வாரீர்!
என்ற தேசிய கீதம் கேட்டு மகிழ்ந்தவர்.
ஏழை என்றும் அடிமை என்றும்
எவனும் இல்லை ஜாதியில்
இழிவுகொண்ட மனிதர் என்போர்
இந்தியாவில் இல்லையே!
என்ற சிந்துகேட்டு, செந்தேன் செந்தேன்! இதுநாள் வரை நான் கேட்டறியாத கீதம் என்று கூறிக்களித்தவர்!
தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில்
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்
என்ற வீரக்கவிதை கேட்டு, நெஞ்சம் விம்மிடும் நிலையில், ஆம்! ஆம்! அழிந்துபட்ட ஆங்கில அரசு! செவி குளிரக் கேட்கிறது சுதந்திர முரசு! இனி, பசியும் பட்டினியும் கொட்டுமோ! பஞ்சையும் பராரியும் இருப்பரோ!—என்று எண்ணிக் களிநடம் புரிந்தவர்.
உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்
வீணில் உண்டு கொழுத்திருப் போரை
நிந்தனை செய்வோம்.
என்ற கீதம், ஊரூரும் பாடிடத்தேச பக்தர்கள் கிளம்பிடக்கண்டு, இனிஎன் நாட்டுக்குப் புதுவாழ்வு நிச்சயமாகிவிட்டது, பொழுது புலர்ந்தது, புதுவாழ்வு மலர்ந்தது, என்று பூரித்துக் கூறியவர்.