பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

காங்கிரஸ் அரசாள்கிறது, என்ற நிலைகண்டு, இனி ஜெயமுண்டு! பயமில்லை! மனமே! என்று சிந்துபாடிச்சிந்தை மகிழ்ந்திருந்தார்.

காமராஜர், ஆட்சிப்பீடம் ஏறிஅமரக் கண்டதும், பட்டம் பெற்றறியார், பல்கலைக்கழகம் பார்த்தறியார், பாரதமாதாவின் சேவையன்றிப் பிறிதோர் பயிற்சியும் பெற்றார் இல்லை, எனினும், இவர் நாடாள வாய்ப்புக் கிடைத்துவிட்டது, பாமர மக்கள் பாராளும் காலம் இது—என்ற கவிதா வாக்கியம், உண்மையாகிவிட்டது; இஃதன்றோ காணக்கிடைக்காத காட்சி என்றெல்லாம் எண்ணி எண்ணி இறும்பூதெய்தி இருப்பார். ஏன் எனில், காமராஜரும், விருதுநகர்—தொண்டர் குழாத்தில் இருந்த தூயமணி!

இவ்வளவு இன்ப நினைவுகளும், பொடிப் பொடியாகும்படியான பேரிடி அவர் நெஞ்சிலே விழுமென்று யார் கண்டார்கள்—

இந்தப் படுபாவிகள் இவ்வளவு மோசமாகிப் போவார்கள் என்று நாங்கள் எண்ணவில்லையே! எவ்வளவோ பாடுபட்டு, இவர்கள் ஆட்சிக்கு வர உழைத்தோம்...எல்லாம் வீணாயிற்றே...

என்று என்னிடம் அவர் கூறியபோது, தம்பி, உள்ளபடி, அவருடைய கண்களில் நீர் துளிர்த்துக் கொண்டிருக்கக் கண்டேன். அப்போதுகூட, நான், அவர் இறந்துபடுவார் என்று எண்ணிடவில்லை—காரணம், அவர் அவ்வளவு தெளிவாக, உணர்ச்சி வயப்பட்டவராக என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்—அறுபது நாட்களுக்கு மேலாகிவிட்டது உண்ணாவிரதம் துவக்கி—எனினும் என்னிடம் அரைமணி அளவுக்கு அவர் பேசுகிறார் என்றால், நான் என்ன எண்ணிக்கொள்வது. இப்போதல்லவா எனக்குப் புரிகிறது, உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் வேளையிலும் அந்த உத்தமருடைய உள்ளத்தில் அத்துணை உரம் இருந்திருக்கிறது என்ற உண்மை.

இன்றுபோல் அன்றும் நடுநிசி—நானும், நண்பர்கள் நடராசன், மதுரை முத்து ஆகியோரும், அவரைக் காணச்சென்றபோது, விருதுநகரில், காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கம் என்பார், உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்தே, எனக்கு அவரைக் காணச் செல்லவேண்டும் என்று அவா. அன்றுதான் முடிந்தது.