108
அந்தத்திடலில், நான் பலமுறை பேசியிருக்கிறேன்—கடைவீதியை ஒட்டி உள்ள மாரியம்மன் கோயில் திடல். வீரம், தியாகம், வாழ்க்கையை அர்ப்பணிப்பது, எதற்கும் அஞ்சாமல் கடமையைச் செய்வது, இன்னல் எதுநேரிடினும் கலங்காமலிருப்பது என்பனபற்றி, பலர் ஆற்றலுடன் முழக்கமிடுவதற்காக அமைந்துள்ள திடல் - நானும் அங்கு நின்று பேசியிருக்கிறேன். அந்தத் திடலில், வீரமும் தியாகமும் ஓருருவாகி, சங்கரலிங்கனாராகிக் காட்சி தரும் என்று, யார் எண்ணியிருந்திருக்க முடியும். அந்தத் திடலில், ஒரு சிறு ஓலைக்கொத்துக் குடில் அமைத்துக்கொண்டு, ஒரு கயிற்றுக் கட்டிலின்மீது அவர் படுத்துக்கொண்டிருக்கக் கண்டேன். அந்தக் குடிலின்மீது, காங்கிரஸ் கொடி பறந்துகொண்டிருந்தது.
காங்கிரசால் உயர்ந்தவர்கள் ராஜபவனத்தில் சயனித்துக் கொண்டிருக்கக் காண்கிறோம்; கோட்டைகளில் கொலுவிருக்கக் காண்கிறோம்; உல்லாச தோட்டக்கச்சேரிகளிலும், நளினிகளின் நாட்டியக் கச்சேரிகளிலும், உலவிக் களித்திடப் பார்க்கிறோம்; மாளிகைகளிலே பலர் குடி ஏறிடக் காண்கிறோம், காங்கிரசின் துணையினால்; இதோ குடிசையில் படுத்துக்கிடக்கிறார், உணவு உட்கொள்ள மறுத்துத் திங்கள் இரண்டு ஆகிறது. உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் நிலையில் கிடக்கிறார், காங்கிரசை வலிவும் பொலிவும் கொள்ளச்செய்யும் தொண்டாற்றிய வீரர்—முதியவர்.
காங்கிரஸ் கொடி, அந்தக் குடிலின்மீது பறந்துகொண்டிருக்கக் கண்டதும், தம்பி, எனக்குச் சொல்லொணாத வேதனைதான்! உள்ளே உயிர் போகட்டும், கவலையில்லை, உணவு உட்கொள்ளப்போவதில்லை—என்று கூறிக்கொண்டு ஒரு முதியவர் சாகும் நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்—அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டதே, காங்கிரஸ் ஆட்சி, அலங்கோலங்களைப் போக்கிக்கொண்டு, அறவழி நிற்க வேண்டும் என்பதற்காக; அந்தக் குடிலின்மீது, அவர் உயிரைக் குடித்துக்கொண்டிருக்கும் கொடுமையை விளக்கவா காங்கிரஸ் கொடி பறந்துகொண்டிருக்கவேண்டும்!
நடுநிசி-எனவே அங்கு நான்கைந்து பேர் மட்டுமே இருந்தனர்—ஒரு திரை போடப்பட்டிருந்தது, குடில் வாயிலில் - அதை நீக்கியபடி உள்ளே சென்று பார்த்தேன்—கயிற்றுக் கட்டிலின்மீது சுருண்டுபடுத்திருந்த உருவம் தெரிந்தது—மங்கலான விளக்கொளியில், எனக்கு அவருடைய முகம் தெளிவாகத் தெரியவில்லை! சில விநாடி உற்றுப்பார்த்த பிறகே தெரியமுடிந்தது.