பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109

அமைதி குடிகொண்டிருந்த இடம்; நாங்கள், சத்தம் ஏதும் எழலாகாது, அவருக்குச் சங்கடம் ஏற்படும் என்று எண்ணிக்கொண்டபடி உடன் வந்த தோழரை, எழுப்பாதீர் ஐயா! என்று ஜாடை காட்டிச் சொன்னோம். அவரோ, தியாகத் திருவைத் தொட்டுத் தட்டினார். சங்கரலிங்கனார் கண் திறந்தார்—தூக்கமல்ல, சோர்வினால் செயலற்றுப்போன நிலை.

“ஐயா! அண்ணாத்துரை..” என்றார் அந்த நண்பர், ஒருவிநாடி அவர் என்னைப் பார்த்தார்—அந்தப் பார்வையின் முழுப்பொருளை ‘பாவி’ நான், அன்று சரியாக உணர்ந்து கொள்ளமுடியவில்லை! செத்துக்கொண்டு இருக்கிறேனடா, செயலறியாதவனே! என்பதல்லவா அந்தப் பார்வையின், பொருள்.

மிகப் பெருங்குணம் வாய்ந்தவர் அந்தப் பெரியவர்.

“அண்ணாத்துரை...” என்று அந்த நண்பர் சொன்னதும், என் இரு கரங்களையும் பற்றிக்கொண்டார்—அவருடைய முகத்தருகே என் கரங்கள்—கண்ணீர் கரத்தில் தட்டுப்பட்டது, என் கண்கள் இருண்டுவிடுவது போன்றதோர் நிலை ஏற்பட்டது.

‘தலைமாட்டிலே’ நான் உட்கார அவர், இடம் செய்துதர சிறிது, நகர்ந்தார்—நான் அமர்ந்தேன் — அவருடைய போர்வை கலைந்தது. எலும்புக்கூடாகத் தெரிந்தார். பழுத்த பழம்! பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டு காலந்தள்ளிக் களித்திடவேண்டிய வயது—உண்ணாவிரதம் மேற்கொண்டு அறுபது நாட்களுக்கு மேலாகிவிட்டன. பச்சைத் தமிழர்தான் பரிபாலனம் செய்கிறார், பாதி உயிர்போய்விட்டது என்று கூறாமற் கூறிக்கொண்டு குமுறிக்கிடக்கிறார், காங்கிரஸ் ஆட்சியைக் காணவேண்டும் என்பதற்காக, கடமை உணர்ச்சியுடன் தொண்டாற்றித் தொண்டு கிழமான அந்தத் தூயவர்.

அவர், உண்ணாவிரதம் மேற்கொள்வதற்கான காரணங்களை விளக்க வெளியிட்ட அறிக்கையையும், அவர் வெளியிட்டகோரிக்கைகளையும் நான் பார்த்திருக்கிறேன் அதிலே ஒன்றுகூட சொந்த நலன்பற்றியது என்று சுட்டிக்காட்ட, சூட்சித்திறன் மிக்கோரால்கூட, முடியாது. நாடே கேட்கும் கோரிக்கைகள். நல்லோர் எவரும் மறுக்கமுடியாத கோரிக்கைகள். நாடாள்வோரின் கவனத்துக்கு நாள் தவறாமல் பல கட்சிகளும் வைத்த வண்ணம் இருக்கும் கோரிக்கைகள், இவைகளை நிறைவேற்றி வைப்பதாலே,