பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

காங்கிரஸ் ஆட்சி அழியாது இந்திய ஐக்யம் பாழ்படாது, எந்த வகுப்பாருக்கும் கேடுவராது, பெரும்பணச் செலவு ஏற்படாது, சட்டச் சிக்கல் எழாது.

மாற்றுக் கட்சிகளுக்கு மணிமகுடம் கிடைத்து விடாது.

பச்சைத் தமிழரின் பரிபாலனத்துக்குக் கூடக் குந்தகம் ஏதும் நேரிட்டுவிடாது.

அவர் கோரிக்கை மொத்தம் 12—அதிலே 10, மத்திய சர்க்காரைப் பொறுத்தது, இரண்டே இரண்டுதான், மாகாண சர்க்கார் சம்பந்தப்பட்டது என்று திருப்பூரில் முதலமைச்சர் என்ற முறையில் காமராஜர், விளக்கம் அளித்திருக்கிறார்.

முதலமைச்சர் பேசினார், காங்கிரஸ்காரர் பேசவில்லை! மந்திரிப் பதவி பேசிற்று, மனிதாபிமானம் பேசவில்லை.

விளக்கம்தரப்பட்டது, இதயம் திறக்கப்படவில்லை.

கேட்டது 12-அதில் 10-மத்திய சர்க்கார் சம்பந்தப்பட்டது என்று சட்ட நுணுக்கம் காட்டும் முதலமைச்சர் செய்தது என்ன? சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை டில்லிக்கு அறிவித்தாரா? அறிவித்து ஆவன செய்வதாக, அந்தப்பெரியவருக்குத் தெரிவித்தாரா? தெரிவித்துவிட்டு, என்னால் ஆனதைச்செய்வேன் என்று வாக்களித்தாரா?

இல்லை! இல்லை! இப்போது விளக்கம் அளிக்கிறார்!

நாம் எதைச் சொன்னாலும் கேட்டுத் தீரவேண்டிய பக்குவத்தில் நாடு இருக்கிறது, நமக்கென்ன என்று பேசினாரேயன்றி, இதயத்திலிருந்தா எண்ணம் வெளிவந்தது!

மத்ய சர்க்கார் சம்பந்தப்பட்ட பத்து இருக்கட்டும்—இவர் சம்பந்தப்பட்ட இரண்டு இருக்கிறதே, அதற்கென்ன பதில் அளித்தார்! இப்போது விளக்கம் அளிக்கிறார். இவருடைய விளக்கம் அந்த வீரத்திருவிளக்கு அணைந்தபிறகு வெளிவந்திருக்கிறது. எத்துணை அன்பு ததும்பும் நெஞ்சம், தம்பி, நமது முதலமைச்சருக்கு. எனக்குப் பழக்கமில்லை, உனக்குத் தெரிந்தருக்காது, சங்கரலிங்கனாரை, காமராஜருக்குத் தெரியாதா? இப்போது காமராஜர், காரில் போவார், நடந்து செல்லும் நண்பர்களைக் கண்டு உறவாட இயலாது; முதலமைச்சர் என்ற முறையில் அது முடியாததாகிவிட்-