113
குணவானுடைய உயிரைக் காப்பாற்றிவிடுவார் என்று எண்ணிக்கொண்டேன்.
நான் கண்டேனா, நாடாள வந்தவர்கள், மனதை இரும்பாக்கிக் கொள்ளவேண்டும் என்பதை. காமராஜர், அதுபோலவே மலைகுலைந்தாலும் மனம் குலையாத தமிழனல்லவா! அதனால், பிணமானாலும் பரவாயில்லை, கோரிக்கைகளுக்கு இணங்குவதாகக் கூறமாட்டேன், கூறினால் ‘கௌரவம்’ என்ன ஆவது, என்று கருதுபவர் போலத் தம் போக்கால் காட்டிக் கொண்டார்; சங்கரலிங்கனார், எழுபது நாட்களுக்கு மேல் உண்ணாவிரதமிருந்து, மூர்ச்சையாகிவிட்ட பிறகு, மதுரை மருத்துவ விடுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மறைந்து போனார். அவருடைய உயிர்தான் போயிற்றே தவிர, முதலமைச்சர் பதவிக்கு உள்ள ‘கௌரவம்’ இருக்கிறதே, அது போகவில்லை! போகவிடவில்லை காமராஜர்! சங்கரலிங்கனார்கள் சாகலாம், பிழைக்கலாம், காமராஜர், முதலமைச்சர் பதவிக்கு உள்ள கௌரவத்தைக் குலைத்துக் கொள்வாரா! உறுதியாக இருந்துவிட்டார்.
உண்மையிலேயே மோசமாகிவிட்டது.
உயிர் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.
பேச்சு நின்றுவிட்டது; ஊமை மூச்சுதான் இருக்கிறது.
எந்த விநாடியும் உயிர் போய்விடக்கூடும்.
மேல் மூச்சு வாங்குகிறது; கண் மூடிவிட்டது; கால் வீக்கம் கண்டுவிட்டது.தம்பி! ‘ஒற்றர் படையினரும்’ உற்ற நண்பர்களும், பதவிக்குப் பிறகு பெற்ற தோழர்களும், நிலைமையைக் காமராஜருக்கு, இதுபோலெல்லாம் எடுத்துச்சொல்லாமலா இருந்திருப்பார்கள். என்ன சொன்னாரோ முதலமைச்சர்!
அப்படியா...
ஆமாமாம்...
அட, பாவமே...
நிஜமாவா...
போய்விடும்னே சொல்றாங்களா...
பெரிய தொல்லையாப் போச்சே...