பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

என்ற விதமாகத்தான் அவர் கூறியிருப்பார்; வேறு விதமான பேச்சு இருந்திருந்தால்தான், சங்கரலிங்கனாரை நாடு இழந்திருக்காதே!

துணிவுடன், நடப்பது நடக்கட்டும் என்று இருந்து விட்டிருக்கிறார்.

ஏழை அழுத கண்ணீருக்கே பயப்படவேண்டும், நேர்மையான ஆட்சியாளர் என்கிறார்கள். சுடலையில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. காமராஜர் ஒரு சொட்டுக் கண்ணீர்விடவும் மறுக்கிறார்—வேறு வேலை நிரம்ப!

நான் சாவதனாலாவது...

என்று அந்த உத்தமர் என்னிடம் சொன்னார்—தமிழர் சமுதாயம் இன்று அடைந்துள்ள சீர்கெட்ட நிலையை உணராது இதுபோலப் பேசுகிறாரே என்று நான் எண்ணி வருந்தினேன்.

பொட்டி சீராமுலு உண்ணாவிரதம் இருந்தார்—ஆந்திரம் அலறித் துடித்தது—சங்கரலிங்கனார் சாகக்கிடக்கிறார் என்று தெரிந்து, தமிழகம் என்ன கோலம் கொண்டிருந்தது—ஒவ்வொரு காங்கிரஸ்காரரையும் உரைத்தும் நிறுத்தும் பார்த்து, எந்தக் ‘கோஷ்டி’ என்று கண்டறியும் காரியத்தில் ஈடுபட்டிருந்தது!

எப்போதும்போல, மாணவ மணிகள்தான், தமிழ் இனம் இன்னமும் தலைதூக்கவே முடியாத நிலைக்குத் தாழ்ந்து அழுந்திவிடவில்லை என்பதைக் காட்டும்விதத்தில், மௌன ஊர்வலம நடத்தியும், அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றியும், தன் கடமையைச் செய்தது.

மதுரையிலும் வேறு இரண்டோர் இடங்களிலும், நமது கழகம் அனுதாபக் கூட்டம் நடத்திற்று.

மற்றப்படி பார்க்கும்போது, தமிழகம், காமராஜ் கோலத்தில்தான் இருக்கிறது!

இந்தத் திங்கள் 21ம் நாள், தமிழகம் தன் கடமையைச் செய்யும்—நாடெங்கும் அனுதாபக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருவகையில் ஆறுதல்தான். ஆனால், தம்பி, அந்த உத்தமர் தம் இன்னுயிரை ஈந்தாரே, நாம் என்ன செய்யப் போகிறோம்.

தமிழ்நாடு என்ற பெயர் பெறுவதற்காவது நாம் முனைந்து நிற்க வேண்டாமா?