பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115

ஒப்பற்ற ஒரு உத்தமரின் தியாகம், இதற்குக்கூடவா வழி ஏற்படுத்தாது.

சங்கரலிங்கனாரைத்தான் சாகடித்து விட்டீர்கள், உங்கள் அலட்சியப்போக்கினால். அவருடைய உள்ளத்தில் ததும்பிக்கொண்டிருந்த ஆசையில், ஒன்றே ஒன்றையாவது, தமிழ்நாடு என்ற பெயர் தரும் காரியத்தையாவது செய்யக்கூடாதா என்று காங்கிரஸ் ஆட்சியைக் கேட்கும் அளவுக்காவது தமிழகம் செயல்படலாகாதா?

அந்தோ! அருமைத் தியாகியே! தமிழகத்திலேயன்றோ, உன் அரும்பெரும் தியாகம் கண்டனர்.

தாசர் புத்தி தலைக்கேறிவிட்ட தமிழகமாயிற்றே!

தருக்கரிடம் சிக்கிச் சீரழிந்து கிடக்கும் தமிழகமாயிற்றே!

உண்மைத் தியாகத்தின் உயர்வு அறியாத உலுத்தர்கள் உயர் இடம் பிடித்துக்கொண்டு, அன்பு, அறம், ஆகியவற்றை அழித்தொழிக்கும் நிலைக்கு வந்துற்ற தமிழகமாயிற்றே!

இங்கே அறம் ஏது? வீரம் எங்ஙனம் எழும்? நீதிக்கு வழி ஏது? நிமிர்ந்து நின்று உரிமை பேசுவோர் யார்? என்றெல்லாம் அழுதபடி கேட்கத் தோன்றுகிறது.

அண்ணா! அப்படி ஒரே அடியாகத் தமிழகத்தைத் தாழ்த்திவிடாதே—தமிழகம் தயக்கமடைந்திருக்கிறது, உண்மை; ஆனால் உத்தமரின் உயிர்த்தியாகம், தமிழகத்தின் கண்களிலே குருதி பீறிட்டுவரச் செய்திருக்கிறது; கட்சி பேதமின்றி, இந்தக் கட்டத்தில், சங்கரலிங்கனாரின் தியாகத்தை நினைவிற்கொண்டு, தமிழ்நாடு என்ற பெயர் கிடைக்கச் செய்வதற்கான கிளர்ச்சியினைத் துவக்க ஆற்றல் உள்ளவர்கள் அனைவரும் ஒரு அணிவகுப்பாகுவர், அனுதாபக் கூட்டமே, அதற்கான நாளாகும்.

அந்தச் சூள் உரைத்திடும் நாளாக அமையும்—என்று கூறிடும் எண்ணற்ற தம்பிகளைக் காண்கிறேன். அவர்களிடம் எனக்கு நிரம்ப நம்பிக்கையும் உண்டு.

வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும், நமது நெஞ்சு நெக்குருக வணக்கம் கூறுகிறோம்.