பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

அவர் காட்டிய தியாகப் பாதையில் செல்வதென்பது அனைவருக்கும் சாத்தியமானதல்ல; ஆனால் அவருடைய தியாகத்தை மதிக்க மறுப்பவர், மறந்து திரிபவர், தமிழராகார், மனிதராகார்!

தமிழகம் விடுதலைபெறுவதற்கே இந்த வீரத்தியாகம் பயன்படப் போகிறது.

பிறப்பிற இடங்களில், இத்தகைய சம்பவம், கலகத்துக்கு, பலாத்காரத்துக்கு வழிகோலும்—காண்கிறோம்.

தமிழகத்தின் முறை தனித்தன்மை வாய்ந்தது; அறவழியின்படி உள்ளது.

அறம் வெல்லும், நிச்சயமாக வெல்லும்; அறம் ஆர்ப்பரிக்காது, அத்துமீறிய காரியத்துக்கு மக்களைச் செலுத்தாது; அதன் பயணம் துரிதமானதாக இராது—ஆனால் தூய்மையானதாக இருக்கும்.

அறம் நிச்சயமாக வெல்லும்—ஆனால் அது கடுமையான காணிக்கைகளைக் கேட்கும்.

மிகக் கடுமையான காணிக்கை தரப்பட்டாகிவிட்டது; வீரத்தியாகி உயிரை அர்ப்பணித்தார்.

தமிழக விடுதலைக்காக, நாமும் காணிக்கைதரத் தயாராகவேண்டும்; அந்தப் பக்குவம் நமக்கு ஏற்பட வேண்டும்; வீரத்தியகியின் நினைவு, நமக்கு உள்ளத் தூய்மையை, உறுதியை, தியாக சுபாவத்தை தருவதாக அமைதல்வேண்டும். தியாகிக்குத் தலைவணங்குவோம்! தாயகத்துக்குப் பணிபுரிவோம்.


21—10—1956

அன்பன்,
அண்ணாதுரை