118
ஒளிவு மறைவு இன்றிக் கூறியிருக்கிறார் - அவருடைய வீழ்ச்சிக்கு உள்ள பல காரணங்களில் இதுவும் ஒன்று என்று கருதுவோர் உளர்.
மைசூர் ராஜ்யத்தின் முதலமைச்சராக அவர் இருந்த நாட்களிலேயே, மத்திய சர்க்காரின் ஆதிக்கப்போக்கைக் கண்டித்ததால், அவர்மீது டில்லி அரசுக்கு ஒரு கடுப்பு வளர்ந்திருக்கக்கூடும்—மைசூர் ராஜ்யத்திலேயே அவருக்கு வேறு காரணத்தால் எதிர்ப்பு கிளம்பியதும், டில்லி அவருடைய வீழ்ச்சியை அனுமதித்து, இருக்கக்கூடும். பெரிய இடத்து விவகாரம்—எனவே முழு உண்மை வெளிவருவது கடினம். ஆனால், ஒரு அரசின் முதலமைச்சராக உள்ளவர் தமது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமானால் என்னென்ன முறையைக் கையாளவேண்டும் என்ற சாணக்கிய சூத்திரம் தெரிந்துகொள்ள அல்ல, இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுவது. நாடு அறியவேண்டிய மிக முக்கியமான உண்மை, தன் ராஜ்யத்தின் நலனில் அக்கரை கொண்ட தலைவர் யாரும், மத்ய அரசு கொண்டுள்ள போக்கைக் கண்டிக்காமலிருக்க முடியவில்லை, மனக் குமுறல் ஏற்படாமலில்லை, ‘ஜாடை மாடை’யாக வேனும் பேசிக்காட்டவேண்டி இருக்கிறது, என்பதுதான்.
சிலர் இதுபோலப் பேசத் தலைப்பட்டதும், டில்லி விழித்துக்கொள்கிறது—ஆசை காட்டியோ அச்சமூட்டியோ, அவர்தம் வாயை அடைத்துவிட முடிகிறது.
கவர்னர் பதவிகளையும், வெளிநாட்டுத் தூதர் பதவியையும், பல்வேறு நாடுகளுக்குப் பவனி செல்லக்கூடிய கமிஷன் பதவிகளையும், வாரி வீசும் அதிகாரம் கையில் இருக்கிறது; முற்றுந்துறந்த முனிவர்களை மயக்கிட கடவுளே, தேவலோக கட்டழகிகளை ஏவுவாராமே! கடவுளின் செயலே இதுவென்றால், ஆதிபத்ய ஆசை கொண்டவர்கள், பதவிப் பாவைகளை ஏவிவிட்டு, இவர்களை இளித்தவாயர்களாக்கிவிடுவது, நடைபெறக்கூடாததாகுமா!! சபலம், யாரை விடுகிறது?
“மத்ய சர்க்கார்—மாகாண சர்க்கார் என்று பிரித்துப் பேசுகிறார் பிரபோ!”
“யார், அவ்விதம் பேசுபவர்?”
“இன்ன ராஜ்ய முதலமைச்சர்!”
“முதலமைச்சராக இருந்துகொண்டா அங்ஙனம் பேசுகிறார்? என்ன பேதைமை, என்ன பேதைமை!”