119
“என்ன போக்கிரித்தனம் என்று சொல்லுங்கள், பிரபோ! நமது தயவை நாடி, துதிபாடி, மற்றவர்கள் தமது ஆட்சியைக் காப்பாற்றிக்கொண்டிருக்க, இந்த முதலமைச்சர் எவ்வளவு துணிவுடன், நமது ஆதிபத்தியத்தைத் துச்சமென்று கருதி, யாரோ தம்மை மெச்சிக்கொள்ள வேண்டுமென்பதற்காக, மத்திய சர்க்கார்—மாகாண சர்க்கார் என்று பிரித்துப் பேசுகிறார், உரிமைபற்றிக் கதைக்கிறார்—இதை மகாப்பிரபோ! நாம் அனுமதிக்கலாகாது...ஆபத்தாகும், பிறகு! ஒரு இடத்திலே இந்தத் துணிவு ஏற்பட்டுவிட்டால், ஏற்பட்டது கண்டும் நாம் அதனைக் களைந்து எறியாமலிருப்பது தெரிந்துவிட்டால், மற்றவர்களும் கிளம்புவர்—பிறகு பாரதம், களமாகிவிடும். எனவே, இதனை உடனடியாக, அடக்கியாக வேண்டும்.”
“வீண் பீதிகொள்கிறாய்! ஒரு முதலமைச்சர் முணு முணுப்பதாலே, நமக்கு என்ன ஆபத்து நேரிட்டுவிடப்போகிறது; நாம் இதன் பொருட்டு, அந்த முதலமைச்சரை அடக்கமுற்பட்டால், ஆ—ஊ—என்று கூவி, மற்றையோரையும் கிளப்பிவிட்டுவிடுவார்...”
“அதுவும் ஒரு வகையில் உண்மைதான்......ஆனால் நமது ஆதிபத்தியத்தைக் கண்டிக்கும் போக்கு வளர்விடலாகாது...”
“ஆமாம்! வளரவிடப்போவதில்லை...”
“எப்படி, மகானுபாவா!”
“எண்ணற்ற வழிகள் உள்ளன! அந்த முதலமைச்சருக்கு உள்ள ஆசாபாசங்களை அறிந்துவா; எந்தப் பதவிமீது மோகம் பிறந்திருக்கிறது; ரஷியாபோய்ப் பார்க்கப்பிரியம் ஏற்பட்டுவிட்டதா; பாரிஸ் பயணம் தேவையா; அமெரிக்கா சென்று ஆனந்தம்காண விருப்பம் எழுந்திருக்கிறதா; என்னதான் புதிய பசி என்பதை அறிந்துவா; அந்தப் பசிக்கு ஏதேனும் தருவோம்; வாய் தானாக மூடிக்கொள்கிறது; வாழ்த்தி வணங்க ஓடோடி வருவார்”
“எல்லோரும், இதேபோல இருப்பார்களோ?”
“இது ஒன்றுதான், நமக்கு உள்ள முறையோ! பைத்யக்காரா! நமது அம்புறாத்தூணியில் இஃதுமட்டுமா, இருக்கிறது?
ஆசைக்குக் கட்டுப்படாதவர் என்று தெரிந்தால், அச்சத்தை ஏவுவோம்...ஷேக் அப்துல்லா படம் ஒன்று அனுப்பிவைத்தால் தெரிந்துகொள்கிறார்.”