பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

“பலே! பலே! நானோர் ஏமாளி! தங்கள் முறையின் நுட்பத்தை அறிந்துகொள்ளும் ஆற்றலைப் பெற்றேன் இல்லை!”

மத்திய சர்க்காரிடம் அளவுமீறிய அதிகாரம் குவிந்து கிடக்கிறது; அதனால் ராஜ்ய சர்க்கார் தரம் இழந்து, திறம் அற்று, பெரியதோர் பஞ்சாயத்துபோர்டாக வாழ்க்கையை ஓட்டவேண்டி நேரிட்டுவிடுகிறது என்ற கருத்து குடையும் மனத்தினராகி, மனதிற்பட்டதை எடுத்துக்கூறும் துணிவினைப் பெற்றுவிட்டால், அவரைப் பற்றி, டில்லி தேவதைகள், இது போல் பேசிக் காரியமாற்றும் போலத் தெரிகிறது.

மகாவீர் தியாகி என்றோர் மந்திரி இருக்கிறார், டில்லியில்—இவர் டில்லி பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த நாட்களில், சர்க்காரின் செயலில், திட்டத்தில், போக்கில், காணக்கிடைக்கும் ‘ஓட்டைகளை’க் காட்டிக் காட்டிச் சாடுவார்! பல இலாகாக்களிலே மலிந்துகிடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்துவார்! அமைச்சர்களின் தவறுகளைக் காட்டிக் கேலி பேசுவார். அவருடைய கேள்விகள், சர்க்கார் தரப்பினரைத் திணறவைத்திடும்! அவர் தரும் புள்ளி விவரங்கள், சர்க்காருக்கு மண்டைக் குடைச்சல் ஏற்படுத்தும்.

இந்தவிதமாக இடித்துக்கொண்டிருந்த தியாகி இப்போது அமைச்சராகிவிட்டார்!

ஏன்? அழைத்தார்கள்! எப்படி? அதுதான் இன்று டில்லி கையாளும் அரசியல் செப்படிவித்தை. தியாகியைத் தீர்த்துக்கட்டவேண்டும்! தீபோலச் சுடுகிறார்; சர்க்காரின் போக்கைச் சாடுவதிலே சமர்த்தராக இருக்கிறார்; இவரை வெளியே விட்டுவைத்தால், இது போலத்தான் தொல்லை தந்தபடி இருப்பார்; எனவே இவரைப் பிடித்து ‘உள்ளே’ போடவேண்டும்; அமைச்சராக்கிவிடுங்கள்! ஆசாமி பிறகு வெல்வெட்டு மெத்தையில் சாய்ந்துகொள்வார், எதிர்ப்புமாய்ந்துபோகும்!—என்று டில்லி தீர்மானித்தது; தியாகிக்கு அமைச்சர் வேலை கிடைத்தது, சர்க்கார் தரப்புக்கு தலைவலி குறைந்தது.

உணவுத்துறையிலே அமைச்சராக உள்ள கிருஷ்ணப்பா என்பவரை, இப்படித்தான், கித்வாய் கண்டெடுத்தார், என்று, பெருமையுடன் பேசுகிறார்கள், கேட்கிறோமல்லவா! ரபி அகமத் கித்வாய், உணவுத்துறைக்கு மந்திரியாக இருந்தபோது, கிருஷ்ணப்பா வெறும் உறுப்பினராக இருந்துகொண்டு, ஓயாது கேள்விகள் கேட்டுக் கேட்டுக் குடைவாராம்! கித்வாய் இந்த ஆசாமியை இழுத்துவாருங்கள் என்று கூறி, வந்தவருக்கு ஒருவெல்வெட்டு மெத்தையைக் கொடுத்து,