பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/196

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

இப்போது, 1955-ல் அனுமதி பெற்ற, புதிய தொழிற்சாலையினர் (Caustic Soda) சோடா உப்பு தயாரிக்கவும் உரிமை பெற்றுவிட்டார்கள்!

இப்போது நிலைமை என்ன என்பதை எண்ணிப் பார்த்திடலாம், வா, தம்பி!

ஒரு கோடி ரூபாய் மூலதனம் ஏற்பாடு செய்து, அதற்கான பங்கு பெற, என்னென்ன முயற்சிகளில் ஈடுபட வேண்டுமோ அவை யாவும் செய்து முடித்து, துவக்க விழா நடத்தி, வேலையைத் துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறது, 1953-ல் அனுமதி பெற்ற கம்பெனி.

இதற்குக் கழுத்தில் கத்திவைப்பது போல, அதே தூத்துக்குடி வட்டாரத்திலேயே, வேறோர் அமைப்புக்கு அனுமதி வழங்கிற்று, டில்லி.

வாழவைக்கும் வழியா இது? தொழிலை வளர்த்திடும் இலட்சணமா? மூன்று ஆண்டுகள் முயற்சியும், செலவான பணமும் குப்பைதானே!!

தம்பி! இனி, இந்தத் துயரச் சேதியின் உச்சத்தைக் கவனி.

1953ல் அனுமதிப் பெற்று, இப்போது ஊசலாடிக் கொண்ருக்கும் கம்பெனிக்கு அமைப்பாளர், ரோச் விக்டோரியா!

1955ல் அனுமதி பெற்றுக் கிளம்ப வந்திருக்கும் கம்பெனி T. V. சுந்தரம் ஐயங்காருடையது!!

பக்கத்திலே, யாராவது, ‘பாரத மாதாவின் பிள்ளை’ இருந்தால், இந்தச் சேதியைக் கூறிவிட்டு, அவர் முகத்தைக் கவனித்துப்பார், தம்பி!

ரோச்விக்டோரியா தூத்துக்குடித் தொழிலதிபர்—காங்கிரஸ்காரர், இப்போதைய M. L. A. முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்!

T. V. சுந்தரம் ஐயங்கார், காங்கிரஸ்காரராக இருந்ததில்லை!

ரோச் விக்டோரியாவின் முயற்சியில் மண்ணைப் போடுவானேன்? சுந்தரம் ஐயங்கார் கம்பெனிக்கு சந்தன தாம்பூலம் அளிப்பானேன்?