பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

195

ரோச் விக்டோரியா மூன்றாண்டுகளாக எடுத்துக்கொண்ட முயற்சி என்ன கதி ஆவது?

அஸ்திவார விழாவன்று அவர், பாபம், மைசூர் மகாராஜாவின் பக்கத்திலே நின்றுகொண்டு, பூரிப்புடன், புதிய தொழிற்சாலை பற்றிப் பேசியபோது, அவருடைய மனக்கண் முன்பு ஓங்கி நிற்கும் புகை போக்கிகளும், உருண்டு கிடக்கும் இருப்புச் சக்கரங்களும், உற்பத்தியாகும் சரக்குகளும், அவைகளை ஏற்றிச் செல்லும் பெட்டிகளும், கிடைத்திடும் இலாபத்தைக் கொட்டிவைத்திடும் கொட்டடியும், இலாபம் தேடித்தர உழைத்திடும் பல்லாயிரம் பாட்டாளிகளும், தோன்றி இருந்திருக்கக் கூடும்!

நாமோ காங்கிரஸ்காரர், கழகம் அல்ல!

பிரமுகர் வரிசையிலே மட்டுமல்ல, தொழில் அதிபர் பட்டியலிலே, நமது பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது!

காங்கிரஸ் அமைச்சராகவேகூட இருந்திருக்கிறோம்.

வல்லவனுக்கு, வடக்காவது தெற்காவது—எல்லாம் ஒன்றுதான்!!

டில்லியில் நமது குரலுக்கு மதிப்பு எப்படியும் இருந்தே தீரும் என்று பலப்பல எண்ணிக்கொண்டிருந்திருப்பார்.

எல்லாவற்றிலும் இடிவிழுவதுபோல, 1955ல் T.V.S. கம்பெனிக்கு அனுமதி அளித்தது, இந்திய சர்க்கார்.

இப்படி ஒரு பேரிடி வந்து விழும் என்று, ரோச் எப்படிக் கருதியிருக்கமுடியும்! தொழிற்சாலை அமைப்பிலே தீவிரமாக ஈடுபட்டார். தேவையான இயந்திரங்கள் அனுப்பப்படுவதிலே தாமதம் ஏற்படுகிறது என்பதால், ரோச்விக்டோரியா, சுவிட்சர்லாந்து நாட்டுக்கே சென்று, இயந்திரங்களைச் சேகரம் செய்தாராம்!

தொழிற்சாலையோ புதிது, ஆனால் தேவையானது; மூலதனமோ ஒருகோடி; முயற்சியில் ஈடுபட்டவரோ தொழிலதிபர்; வளர்ச்சியோ குறிப்பிடத்தக்க அளவில்; எனினும் 1955-ல் T.V.S. கம்பெனிக்குப் புதிய அனுமதி கிடைக்கிறது! நிலைமையை, இப்போது ஆராய்ந்து பார்க்கலாம், நமது காங்கிரஸ் நண்பர்கள்!

வெட்கமாகவும் இருக்கிறது, வேதனையாகவும் இருக்கிறது என்று கூறுவர் இரண்டோர் காங்கிரஸ்காரராவது; அவர்களைக் கண்ணீர்விடச் சொல்லாதே, தம்பி, இன்னுமோர்