பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/198

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

‘சேதி’யைக் கேட்டுவிட்டு, பிறகு வேண்டுமானால், வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளட்டும்.

ரோச்விக்டோரியாவின் முயற்சிக்கு உலைவைக்கத்தக்கதாக T.V.S. கம்பெனியார், புதிய தொழிற்சாலைக்கு அனுமதி பெற்றார்களல்லவா, அவர்கள் அந்த அனுமதியை தாரங்கதரா ரசாயன தொழிற்சாலை எனும் வேறோர் கம்பெனிக்கு மாற்றிக் கொடுத்துவிட்டார்கள்! இந்தக் கம்பெனி, வடநாட்டுக்காரருடையது!

தம்பி! சம்பூரணமாகிவிட்டதல்லவா, நேராயணம்! இப்போது, சொல்லச் சொல்லு வடநாடு என்ன போக்கில் தென்னாட்டை நடத்துகிறது என்று.

துக்கம் தொண்டையை அடைக்கிறது என்பர் தூய உள்ளத்தை இழந்திடாத, காங்கிரசார்.

சென்னை சர்க்காரிடம் முறையிடலாமே! காமராஜர், தமிழராமே! தமிழ் நாட்டுக்குத் தாழ்வு வரவிடமாட்டாராமே! அவரிடம் மனுச்செய்யலாமே!-என்று முணுமுணுப்பர், சிலர்.

எல்லா முறைகளையும் செய்து பார்த்து, மூக்கறுபட்ட நிலைக்கு வந்துற்ற பிறகுதான், மாஜிமந்திரியும், இன்றைய காங்கிரஸ் M.L.A.யுமான, ரோச்விக்டோரியாவே 1956 செப்டம்பரில், இந்தத் துயரச் ‘சேதி’யை அச்சிட்டு, அனைவருக்கும் வழங்கி இருக்கிறார்!

இப்படியெல்லாம் இடுக்கண் வந்துற்றதால், என் முயற்சியை விட்டுவிடுகிறேன் என்று அவர் அந்த அறிக்கையில் கூறவில்லை.

இப்படி எல்லாம் நடப்பதால், நண்பர்களே! நாட்டவரே! விழிமின்! எழுமின்! இந்த விபரீதப்போக்கைக் களைமின்! என்று முழக்கமிடும் முறையிலே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் மாளிகையின் பெயர் சுகஸ்தான் என்று தெரிகிறது! தம்பி! சுகஸ்தானில் இருப்பவருக்கே, திராவிடஸ்தான் அமைந்தாலன்றி நாடு வாழ வழி ஏற்படாது என்று புத்துணர்வு ஏற்பட்டிருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்—அவ்வளவு வேதனைக்குரல் தெரிகிறது அந்த அறிக்கையில்.

சென்னை சர்க்காரால் செயலாற்ற முடியவில்லை.

சென்னை சர்க்காருக்கு அதிகாரம் இல்லை.