பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

சென்னை சர்க்காரிடம் பலமுறை முறையிட்டோம்—பயனில்லை, காரணம், இந்திய சர்க்காரிடமே இந்த அதிகாரம் இருக்கிறது, மத்திய சர்க்காரின் முந்தானையில் முடி போட்டு வைக்கப்பட்டிருக்கிறது சென்னை-தென்னகத்துத் தொழில் வளர்ச்சியில் அக்கரை கொண்டோரனைவரும் செயலாற்றி, இந்த இராஜ்யத்துக்கு சிறப்பாகவும், பொதுவாகத் தென்னகத்துக்கும் உள்ள பொருளாதார சுதந்திரம் பறிபோகாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை, காரசாரமான முறையிலே, ஆங்கில மொழியிலே, ரோச் வெளியிட்டிருக்கிறார்.

தாம் ஈடுபட்ட ஒரு தொழில் முயற்சியிலே ஏற்பட்ட இடுக்கண், அதிலே டில்லி சர்க்கார் காட்டிய போக்கு, அதிலே சென்னை சர்க்காரின் செயலற்ற தன்மை, அதிகாரமற்ற நிலை, இது மனதிலே உறுத்தியதும், ரோச்விக்டோரியா, தாமோர் காங்கிரஸ்காரர், அமைச்சராகக்கூட இருந்தவர், பாரதநாடு என்ற பரந்த மனப்பான்மையைக் கொள்ள வேண்டியவர் என்ற எதற்கும் கட்டுப்படமுடியா நிலைபெற்று, கொதித்தெழுந்து, கேண்மின்! தோழர்காள்! கேண்மின்! என்று கூவுகிறார். எங்கே போயிற்று, டில்லி போதிக்கும் தேசீயம்!! போலிதானே!! சமயத்திலே, அந்தத் தேசீயம், தேய்கிறது மாய்கிறது, இயற்கை உணர்ச்சிதான் மேலோங்கி வருகிறது!!

ரோச்விக்டோரியா இந்த நிலையைக் கண்டதால், இனி நாட்டுக்கு மத்திய சர்க்காரின் ஆதிக்கப் போக்கை எடுத்துக்காட்டி, இந்த இராஜ்யத்துக்கும், தென்னகத்துக்கும், பொருளாதார சுதந்திரம் கிடைத்திடச் செய்யும் பணியில் ஈடுபடமுற்படுவாரா என்று என்னைக் கேட்டுவிடாதே. நான் திருப்பி உன்னைக் கேட்பேன், கவர்னராக இருந்த நிலையிலேயே, கொதித்துப் பேசினாரே இதுபோல், குமாரசாமிராஜா, அவர் என்ன செய்தார் பிறகு, என்று!

இவர் போன்றாரின் பேச்சு, நாம் மேற்கொண்டுள்ள கொள்கை, அப்பழுக்கற்றது என்பதை நமக்கு உறுதிப்படுத்த உதவுவது, வேறு விளைவுகளை நாம் அவர்களிடமிருந்து எதிர்பார்த்துப் பயன் இல்லை.

சோடா உப்புக்கு அனுமதி கிடைத்தும் பயனில்லை என்றால், இத்தகைய முதலாளிமார்களுக்கு சுவை ஊட்ட டில்லியிடம் வேறு பண்டங்களா கிடைக்காது! இவர்களும், நாடு வஞ்சிக்கப்படுகிறது. நாங்கள் இதற்கு உடந்தையாக இருக்கமாட்டோம், உயர்பதவி தந்தாலும் வேண்டோம்,