199
இலாபச்சுவை ஊட்டினாலும் சீந்தமாட்டோம், என்றா சீறிப்போரிடக் கிளம்புவர்?
சுகஸ்தானத்தில் அல்லவா அவர்கள் வாசம்!
தம்பி! உனக்கும் எனக்கும், நம்போல, உள்ளவர்களுக்கும்தான் இந்தப் பிரச்சினை குறித்து தொடர்ந்து பணியாற்றி வெற்றிகாணும் பொறுப்பு ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அந்தப் பணியில் நாம் ஈடுபட்டு வருகிறோம் இடையிடையே எரிச்சல் காரணமாகவோ ஏமாற்றம் கண்டதாலோ, இப்படிச் சிலர், உண்மை நிலைமையை எடுத்துக் கூறும்போது, நாம் மேற்கொண்டுள்ள பணி நியாயமானதுதான் என்று நமக்கு உறுதியும் உவகையும் ஏற்படுகிறது! அதுவரையில் அவர்கட்கு நாம் நன்றி கூறிக்கொள்ளத்தானே, வேண்டும்.
நாளைக்கே, ரோச் விக்டோரியாவுக்கு சாந்தியும் சமாதானமும் சந்தோஷமும்கூட அளித்திடும் சக்தி டில்லிக்கு உண்டு—பெற்றுத் தருவதாகச் சாகசம் செய்யும் திறம் காமராஜ் சர்க்காருக்கு நிரம்ப உண்டு! எனவே, மீண்டும் அவர்கள் இந்தியா—இந்தியர்—என்று பஜிக்கத்தொடங்கிவிடக்கூடும். ஆனால், அவர்களின் இந்தத் தேசிய பஜனை, உதட்டளவு என்பதும், உள்ளத்தில் இடம்பெற்றதல்ல என்பதும், அவ்வப்போது, பீறிட்டுக்கொண்டு வருகிற பேச்சுகளிலே தெரிகிறதல்லவா! அது நல்லதல்லவா, நமக்கும் நாட்டுக்கும்! அதனாலேயே, இந்தச் சம்பவத்தை எடுத்துக் கூறினேன், உனக்கும் உன் மூலம், நாட்டவருக்கும்.
ஆனால், இதுமட்டும் போதுமா! பிற இடங்கட்கும், உலகுக்கும், இந்தச் சம்பவங்களை எடுத்துக்காட்டி, நமது கழகத்தின் நோக்கத்தை விளக்கவேண்டாமா? ஆங்கில ஏடு மூலம்தானே அதனைச் செய்யமுடியும்.
ஆம்! அண்ணா! என்றுதான் சொல்கிறாய்! அன்புடன் சொல்கிறாய்! ஆனால், சந்தா? அது வரக்காணோமே!!
2—12—1956
அன்பன்,
அண்ணாதுரை