பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

203

படுக்கையில் துடித்துக் கொண்டிருக்கும் ஆண்டியப்பன், உடலில் தீப்புண்கள் ஏற்பட இருந்த காரணம் வேறு—சீந்துவாரற்றுச் சாய்ந்து கிடக்கும் அந்தச் சீமானுடைய உடலிலே காணப்படும் புண்களுக்குக் காரணம் வேறு—இந்த இரு வேறு காரணங்கள் தான், இருவேறு விதமான மனப்பான்மையை, காண்போருக்கும் உடன் இருப்போருக்கும் உண்டாக்கிவிட்டிருக்கிறது.

ஆண்டியின் உடலில் ஏற்பட்டுள்ள தீப்புண்களைக் காணும்போது, ஐயோ பாவம்!—என்று இரக்கமும் அன்பும் கலந்த குரலில் கூறுகிறார்கள் - சீமான் தங்கப்பன் உடலில் உள்ள புண்களைக் கண்டதும், “சனியன்! கண்றாவி!” என்று அருவருப்புடன் பேசுகிறார்கள்.

ஆண்டி உழைத்து அலுத்த நிலையில் தன் குடிசைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்—இருட்டும் சமயம் ஐயயோ! என்ற கூக்குரல் கேட்டது, தெருக் கோடியில் ஒரு வீடு, தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது—பலர் பதறினர்—தண்ணீர் இறைத்தனர்—மணல் வாரி வாரி வீசினர். ஒரு மூதாட்டி, தலைவிரி கோலமாக நின்றுகொண்டு, “ஐயோ! குழந்தை, தொட்டிலில்...தொட்டிலில் குழந்தை...” என்று கதறி நிற்கக் கண்டனர் பலரும். பெரு நெருப்பாகிவிட்டது வீடு—உள்ளே நுழைய யாருக்கும் துணிவு இல்லை. உள்ளே ஓடமுயன்ற மூதாட்டியை மட்டும் தடுத்து நிறுத்திவிட்டனர். ஆண்டி வந்தான்—அலறல் கேட்டான்—உள்ளே, குழந்தை, தொட்டிலில்—என்ற மூன்றே வார்த்தைகள்தான்—எதிரே பெரு நெருப்பு—பாய்ந்தோடினான் உள்ளே!

ஐயோ ஐயோ! என்று அலறினர்—ஆண்டியின் காதில் மூதாட்டியின் குரலொலி தவிர, வேறு எதுவும் விழவில்லை.

இரண்டோர் விநாடியில் ஆண்டி, குழந்தையுடன் ஓடி வந்தான் வெளியே! குழந்தையை ஒரு பெரிய சாக்குப் போட்டு மூடி இருந்தான்—குழந்தை பிழைத்தது, ஆண்டியின் உடலெல்லாம் தீப்புண்!!

சீமான் தங்கப்பன் தன் தோட்டத்தில் குடிசை போட்டுக்கொண்டு குடியிருந்து வந்த குற்றேவல்கார முனியனை, பக்கத்து ஊருக்கு ஒரு வேலையாக அனுப்பிவிட்டு, பசுமாடு இளைத்துவிட்டதே, சரியாக தீனி போடுவதில்லையா? என்று அதிகாரம் பேசும் பாவனையில் இரவு எட்டு மணிக்குமேல் குடிசைக்குச் சென்று, “சத்யத்துக்குப் பொதுவாக நடக்கிறோம் எஜமான்! சாமி சாட்சியா, பசுவுக்குச் சரியானபடி தீனி போடுகிறோம் எஜமான். சந்தேகப்படாதீங்க” என்று