பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

சமாதானம் கூறிய குப்பியை......! பசுமாடு, அவள் போட்ட கூச்சலில் மிரண்டு, கட்டு அறுத்துக்கொண்டது—சீமான் அதனிடம் சிக்கிக் கொண்டான்—அன்றாடம் தீனிபோட்டு அன்புடன் பராமரிக்கும் குப்பியின் கற்பைக் காப்பாற்றும் கடமையை அந்தப் பசு மேற்கொண்டது—சீமான் உடலிலே புண் இந்த வகையில் ஏற்பட்டது!

ஆண்டியிடம் அனைவரும் அன்பு காட்டுவதற்கும் சீமானிடம் அருவருப்பு அடைவதற்கும் இப்போது காரணம் விளக்கமாகிவிட்டதல்லவா! இந்த விளக்கம் பெறத்தான், நாம் மருத்துவமனை வந்தோம். இனி வா, தம்பி, வேறோர் காட்சி காண்போம்.

விளக்கம் சரி, அண்ணா! ஆனால் இப்போது இந்தக் காட்சியும் அது அளித்திடும் கருத்துரையும், என்ன காரணத்துக்காக, என்று இப்போது கேட்கவேண்டாம்—மற்றோர் காட்சியையும் பார்த்துவிட்டுப் பேசுவோம்.

அதோ பார், ஏழ்மையாலும் அடியோடு அழித்திட முடியாத அழகும் அதற்குப் பெட்டகமாக விளங்கும் இளமையும் கொண்ட பெண் மயில்!! பொன்னகை ஒன்றுகூட இல்லை—அந்தப் புன்னகை ஒன்று போதாதா என்று அவளைத்தன் குடும்ப விளக்காகப் பெற்ற குணவான் கூறிக் களிப்படைகிறான் போலும். ஆடையிலே அழுக்கு! கூந்தலில் நெய் இல்லை! ஆனால் கண்களிலே ஓர் கனிவு கவர்ச்சி அளிக்கிறது. போனமாத வாடகை பாக்கிக்காக ‘மூக்குத்தி’யை மார்வாடியிடம் விற்றுவிட்டு, பத்தரை ரூபாய் வாங்கிக்கொண்டு செல்கிறாள் அந்தப் பாவை. கலியாணத்தன்று அவள் அத்தை வீட்டார் கொடுத்த இரவல் நகையைப் போட்டு அலங்கரித்துக்கொண்டு, எடுத்த போட்டோ படத்துக்கு கண்ணாடி போட எண்ணினாள்—அதற்கு இரண்டு ரூபாய் கேட்டான் கடைக்காரன்—அவ்வளவுக்குச் சக்தி இல்லை என்று கூறிவிட்டுத் திரும்பினாள். மடியில் இருக்கிறது படம்! வயிற்றிலே தவழ்கிறது செல்வம்!!

“லட்சுமீ! எங்கேடிம்மா போய்விட்டு, வர்ரே?”

“மார்வாடி கடைக்குத்தான் மாமி”

“எதை வித்துப் போட்டு வந்தூட்டே?”

“மூக்குத்தியை......”

“அதுவும் தொலைஞ்சுதா.........”