209
தாகச் சொன்ன நமது தோழர்கள், 50 மட்டுமே கொடுத்தனர்—எனக்கு பேச்சே எழவில்லை! அதனை நான் கூட்டத்திலேயே குறிப்பிட்டுக் கூறினேன்—பெருமையும் நம்பிக்கையும் கொள்ளச் செய்யும் சேதி கேள், தம்பி — நான் சிறிதளவு சலிப்புடன் பேசுவது கண்ட தோழர்கள் கூடிக் கலந்து பேசி, என்னிடம் தெரிவித்தனர், இந்த வட்டாரத்தின் சார்பாக நமது நண்பர் துரைராஜ் அவர்கள் ஆயிரம் ரூபாய் தேர்தல் நிதி அளிக்க இசைந்திருக்கிறார்—என்று கூறினர். மகிழ்ந்தேன்! கூட்டத்தில் இதனை அறிவித்தேன்—அப்போது மக்கள் அந்தச் சந்தோஷச் செய்தியை எத்துணை ஆர்வத்துடன் வரவேற்றனர் என்பதைக் கண்டு நான் பூரித்துப் போனேன்! பழம் வாங்கி வந்து தந்ததும், ஆண்டியப்பன் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பான்—அதுபோலானேன்!
நமது கழகத்தின் வரலாற்றிலே, மிக முக்கியமான கட்டம், இந்தத் தேர்தல்.
நம்மைச் சுற்றி நச்சு நினைப்பினர் ஏவிவரும் பொச்சரிப்புகள் கொஞ்சமல்ல. நம்மைப்பற்றி, நடமாடவிடும் நிந்தனைகளின் அளவும் அதிகம், வகையும் பலப்பல ஒரு முகாம், இருமுகாமிலிருந்து மட்டுமல்ல, பல்வேறு முகாம்களும் மும்முரமாக இந்தத் திருத்தொண்டில் ஈடுபட்டு, தத்தமது முழுச்சக்தியையும் பயன்படுத்துகின்றன. இதை நான் எதிர்பார்த்ததுண்டு. எளிதிலே வழிவிடுவார்கள் என்று எண்ணிடும் ஏமாளியா, நாம்; அல்லவே!!
பொது வாழ்வுத் துறையில் புதியவர்கள் என்று அலட்சியமாகப் பேசுவது மட்டுமல்ல, புகக்கூடாதவர்கள் என்று வெறுப்புடன் பேசுவோர் நிரம்பிய நிலையை நான் அறிவேன். அவர்கள், நாம் ஈடுபடும் இந்தத் தேர்தல் முயற்சியில், முதல் கட்டத்திலேயே தடுத்து நிறுத்தி, தகர்த்து அழிக்காவிட்டால், ஒரு முறை ‘உள்ளே’ போக இடமளித்துவிட்டால், பிறகு, அந்தக் கழக வளர்ச்சியைத் தடுக்கமுடியாது என்ற திகில்கொண்ட நிலையில், முதல் முயற்சியையே, முழுப்பலம் கொண்டு தாக்கி முறியடித்தாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்றுவர் என்பதை எதிர்பார்த்தவனே! நான் இப்போது காணும் நிலைமை, நான் எதிர்பாராததுமல்ல, என்னைத் திடுக்கிடச் செய்யக்கூடியதுமல்ல. என் நிலையே அது என்றால், தம்பி, எனக்கு அன்பும் ஆதரவும் அளிப்பதன் மூலம் ஆற்றலைத் தரும் உன் நெஞ்சு உரத்தை விளக்கவா வேண்டும்!