210
ஒன்று நான், காண்கிறேன்! எனக்கே, உள்ளத்தில் ஓர் சாந்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது; நமது கழக வரலாற்றின் ஒவ்வோர் கட்டம் தெரியும் போதும், நாம் அதனைக் கடந்து செல்ல முடியுமா; அல்லது பயணம் அந்த இடத்துடன் நின்று போகுமா என்ற ஐயப்பாடு—உனக்கோ உன் போன்ற எண்ணற்ற தம்பிகட்கோ அல்ல—எனக்கு ஏற்படுவதுண்டு! ஆனால், நாட்டிலே, தம்பி, நீ நற்பணியாற்றி அதன் மூலம் திரட்டித் தரும் ஆற்றல், என் ஐயப்பாட்டினைத் துரத்தி அடிக்கிறது, அச்சத்தை அயர்வைப் போக்குகிறது, வெற்றி முரசு ஒலிக்கிறது; ஒவ்வோர் கட்டத்தின் போதும்.
இதனை, நான், நமது கழகத் துவக்கத்திலிருந்து காண்கிறேன்.
பெரியாருடைய திருமணத்தால், மனதிலே பேரிடி விழுந்த நிலை பெற்று, குருசாமியார் ஓடோடி வந்து, என்னைப் பிடித்திழுத்து கச்சையை வரிந்து கட்டிவிட்ட நாளிலிருந்து, இன்று என் செயலை, பிச்சுப்பிள்ளை விளையாட்டு என்று எண்ணிக்கொண்டு எச்சில் துப்புகிறாரே, இந்த நாள்வரையில், ஒவ்வோர் கட்டத்திலும், நான் இந்தக் கவர்ச்சியூட்டும் உண்மையைச் சந்திக்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம்—என்று பெயரிட்டுக் கொண்டு, முன்பு போலவே நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்—என்று, சென்னை முத்தியாலுப் பேட்டையில் ஓர் இல்லத்தில், ஆலோசனைக் கூட்டம் நடத்தியபோது, நான் சொன்ன நேரத்தில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களிலிருந்து, பொறுமைக்கு இருப்பிடம் எனத்தகும் நமது பொதுச் செயலாளர் வரையிலே கொதித்து எழுந்து, கோபம் கொப்பளிக்கும் நிலைபெற்று, நாம் ஏன் பெயர் மாற்றிக்கொண்டு போக வேண்டும், நமக்குத்தான் ஜனநாயக முறைப்படி பழைய பெயர் சொந்தம் என்று வாதாடிய காட்சி இப்போதும் நான் காண்கிறேன்.
அன்று, நாம் இந்த அளவிலும் வகையிலும் வளருவோம் பொதுவாழ்வு துறையில் இந்தவிதமான நிலை பெறுவோம், ஒரு பொதுத்தேர்தலில் ஈடுபடும் கட்டம் காண்போம் என்று எண்ணியவர்கள் எத்தனை பேர் இருக்கமுடியும் என்று எண்ணுகிறாய்!! ஆனால் அந்தக் கட்டம் காண்கிறோம். காண்பாய்! காண்பாய்! மூடா, கேள், என் ஆரூடத்தை! இதுதான் நீ காணப்போகும் கடைசிக் கட்டம் என்று மனக்கசப்பு முற்றிவிட்ட காரணத்தால் பகை பேசும் நிலைக்குச் சென்றுவிட்ட சிலர் கூறுகின்றனர். தம்பி! நான் என் வரையில் பேசுவ-