211
தானால், இதனைக் கூறுவேன்; இது கடைசிக் கட்டம் ஆகிவிட்டால்கூட நான் கவலைப்பட மாட்டேன்; ஏனெனில் இவர்கள் ‘ஆரூடம்’ பலிக்கத் தக்கதானால், நான் இந்தக் கட்டத்தையேகூட எட்டிப் பார்த்திருக்கக் கூடாது. இந்தக் கட்டம் அளவுக்கு ‘ஆயுள்’—இவ்வளவு ஆரூடத்துக்குப் பிறகும் இருந்ததல்லவா என்றுகூட எண்ணி மகிழ்ச்சி கொள்வேன். என் சுபாவம் அப்படிப்பட்டது. ஆனால் கழகத்தின் சார்பில் பேசுகிறேன்—ஆரூடம் முன்பு பலித்ததில்லை, இம்முறையும் பலிக்காது! தம்பி! ஒவ்வொரு கட்டமாக நினைவிலே கொண்டு வந்து பார், நான் கூறுவதன் உண்மை தெரியும்! எத்தனை எத்தனை பழிச் சொற்களை, நம் வழியிலே கண்டோம்—பயணம் குந்தகப்படவில்லையே! காரணம் என்ன? ஐயப்பாடு, அச்சம், அயர்வு, எழும்போதெல்லாம், ஆர்வத்துடன், நமக்கு ஆதரவு அளித்திடப் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் முன் வருகின்றனர்! அண்ணன் அல்ல, பரிவுடன் பேசுகிறார்! தாய் அல்ல, ஆனால் பாசம் காட்டுகிறார்! டாக்டர், ஆனால் கட்டணம் வாங்கவில்லை! ஆண்டியப்பனைக் கண்டோமல்லவா—அது போலவே என்ன செய்வது என்று திகைக்கும்போதெல்லாம், என்ன நேரிடுமோ என்று கை பிசைந்து கொள்ளும்போதெல்லாம், நமக்கு உறுதுணையாக மக்கள் ஆதரவு வந்து சேருகிறது. அந்த ஆதரவே ‘அறிவகம்’—அச்சகம்—திடல் பல ஊர்களில் கழகப்பணி மனைகள்— இப்படி, உள்ளன. இரண்டு கிழமைகளுக்கு முன்புதான், குளித்தலைக்குப் பக்கத்திலே பணிக்கம்பட்டி என்ற சிற்றூரில் சிறிய அளவில் சிங்கார மாளிகை எனத்தகும் கழகக் கட்டிடம் ஒன்றினைத் திறந்துவைக்கும் வாய்ப்பினை, தோழர்கள் எனக்கு அளித்தனர். (அடுத்த கிழமை, படம் காணலாம்) அன்று நான், அந்தச் சிற்றூருக்குச் செல்வதற்கு, கடுமழையையும் கடந்து செல்லவேண்டி இருந்ததால், நீண்ட நேரம் தாமதமாகிவிட்டது—எனினும் பல்லாயிரவர், மழை மிரட்டியது கண்டும் மனம் கலங்காமல் திடலில் இருந்தனர். அவர்கள் காட்டிய உற்சாகத்தை நான், காலங்கடந்து சென்ற பொறுப்புக் குறைந்த போக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, நானே சிறிதளவு வெட்கப்பட்டுப் போனேன். கழகப்பணி மனையைத் தோழர்கள் என்னிடம் காட்டியபோது, அவர்கள் முகம் எத்துணை பொலிவு பெற்றது.
இந்த எழுச்சி எல்லாம் கிள்ளுக்கீரை என்று கருதிக்கொண்டு, காரமான பேச்சினாலேயே நம்மை ஒழித்துவிடலாம் என்று எண்ணுவோர் குறித்து நான் என்ன கருதுவது!!
ஆண்டியப்பன், பாபம், விளைவு தெரியாமல், நெருப்பை எதிர்த்துக் கொண்டான். உடலெல்லாம் தீப்புண், நல்ல