பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/214

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

சிகிச்சை செய்து கொள்ளக்கூட, பணவசதி கிடையாது. என்ன ஆகுமோ தெரியவில்லை—என்று பலரும் பரிதாபத்துடன் பேசிக் கொண்டிருக்கக்கூடும்; ஏனெனில் அவனிடம் பணம் இல்லை என்பது மட்டுமல்ல, அவனிடம் பரிவு காட்டிய பலரிடம் நல்ல மனம் இருந்தது, இருந்த பணம், போதுமானது அல்ல. எனவேதான் அவர்கள் எல்லோருமே திகைத்தனர்; ஆனால், யாரோ ஒருவன் துணிந்து, தூய உள்ளத்துடன் துவக்கினான்—நாம் ஆளுக்குக் கொஞ்சம் செலவிட்டால், சிறு துளி பெரு வெள்ளம் ஆகாதா என்றான்—ஆண்டியப்பனுக்கு நல்லவிதமான மருத்துவ உதவி கிடைத்தது. அது போலத்தான், தம்பி, பெரிய செலவு, மிகப் பெரிய செலவு, பல இலட்சம் வேண்டும், என்று நாம் திகைத்தும், செயலற்றும் இருந்துவிடாமல், சிறு துளி பெரு வெள்ளம் என்ற முறையிலே, பணியைத் துவக்கி இருக்கிறோம்—நமக்கு நம்பிக்கை வளருகிறது.

பணபலம்கூட இருக்கட்டும், அறியாச் சிறுவர்கள் ஆழம் தெரியாமல் காலைவிடுவதுபோல, ஏதோ சில குறிப்பிட்ட தொகுதிகளாகப் பார்த்து, பக்குவமாக நின்று பலன் காண்போம் என்று எண்ணாமல், அகலக் கால் வைக்கிறார்களே!— என்று ஆயாசக் குரலில் சிலர் பேசுவது கேட்கிறோம்.

நம்மிலே, சிலர் எப்படியாவது, சட்ட சபைக்கு உள்ளே நுழைந்தாக வேண்டும் என்ற அரிப்பு இருந்தால் இந்த முறை தான் சாலச்சிறந்தது; ஐயமில்லை! ஆனால் நமது நோக்கம், எத்தனை தொகுதிகளிலே போட்டியிட்டு எத்தனை தொகுதிகளிலே வெற்றி காண்கிறோம் என்று கணக்கெடுத்துப்பார்த்து, அதற்குத் தக்கபடி ‘கீர்த்தி—கித்தாப்பு’ தேடிக்கொள்ள வேண்டும் என்பது அல்ல. எவ்வளவு பரந்த அளவில் ஜனநாயகக் கடமையைச் செய்ய முடிகிறது—எத்தனை விரிவான முறையில், தேர்தல் காலத்தில் அரசியல் எழுச்சி—விளக்கம் அளிக்க வசதி இருக்கிறது, என்பதைச் செயல்படுத்திப் பார்க்கவேண்டும் என்பதுதான். ஜனநாயகத்துக்கான சூழ்நிலையை எந்த அளவுக்கு உருவாக்க முடிகிறது என்பதுதான், இந்தத் தேர்தலில் நமக்கு உள்ள முக்கியமான பணி.

அரசியல் கட்சிகள் தேர்தல்களில் ஈடுபடும்போது, ஏற்படும் வெற்றி தோல்விகள்—ஓட்டு எண்ணி அறிவிக்கப்படும் முடிவுகள் காட்டும் பாடத்துடன் நின்றுவிடுவதல்ல. ஒரு கட்சியின் தாங்கும் சக்தியைக் கணக்கெடுப்பதே, இதிலே மிக முக்கியமான பாடமாகக் கொள்ளவேண்டும்.